பழனியில் 24 அடி உயரமுள்ள வேல் சிலையை அகற்றிய அரசு அதிகாரிகள் : தைப்பூசத்திற்காக முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிர்ச்சி!!

Author: Rajesh
2 February 2023, 10:50 am

பழனி சண்முகநதியில் தைப்பூசத்தை முன்னிட்டு நான்காம் ஆண்டாக வேல் வழிபாட்டுக்காக நிறுவப்பட்டிருந்த சுமார் 24 அடி உயரமுள்ள வேல் சிலையை பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர் அதிகாலையில் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி சண்முகநதியில் தூய்மைப்பணி மற்றும் சண்முகநதி ஆராத்தி நிகழ்ச்சிகளை மெய்த்தவம் பொற்சபை மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் கடந்த நான்கு ஆண்டுகளாக செய்து வருகின்றன.

அதே போல தைப்பூசத்தின் போது சுமார் 24 அடி உயரமுள்ள பித்தளையினால் ஆன வேல் சிலையை அங்கு வைத்து திருவிழா முடிந்த பின் அகற்றி விடுவது வழக்கம். அந்தவகையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் வேல்சிலை அங்கு வைக்கப்பட்டது. தைப்பூசத் திருவிழா வரும் பிப்.7ம் தேதி முடிந்த பிறகு இந்த சிலையை அகற்றி விடுவதாக வழிபாட்டுக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.

நேற்று வரை எந்த பிரச்னையும் இல்லாத நிலையில், நேற்று இரவு சிலையை அகற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அதிகாலை வேல்சிலை அகற்றப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் விடுத்த நிலையில், இன்று அதிகாலை வேல்சிலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.

பொக்கலைன், கிரேன் உதவி கொண்டு சிலையின் பீடம் தகர்க்கப்பட்டு சிலை பிரித்து எடுத்து லாரியில் ஏற்றி போலீஸார் கொண்டு சென்றனர். இதை தடுக்க முயன்ற மெய்த்தவம் பொற்சபை நிறுவனர் மெய்த்தவஅடிகளாரை போலீஸார் ஜீப்பில் ஏற்றி காவலில் வைக்கப்பட்டார். சண்முகநதியில் பக்தர்கள் வழிபாட்டுக்காக நிறுவப்பட்டிருந்த வேல் திடீரென ஏராளமான போலீஸார் பாதுகாப்புடன் அகற்றப்பட்டதை அங்கிருந்த பக்தர்கள் பார்த்து திகைத்தனர்.

இதுகுறித்து மெய்த்தவ அடிகள் கூறுகையில், நான்கு ஆண்டுகளாக எந்த இடையூறுமின்றி வேல் வழிபாடு நடைபெற்று வந்தது. இந்நிலையில் திடீரென அதிகாரிகள் சிலையை அகற்றுமாறு தெரிவித்தனர். காலஅவகாசம் கூட வழங்காது வேல்சிலையை அகற்றுமாறு கூறினர். காலையில் சிலையை அகற்றியும் விட்டனர். எந்த ஆக்கிரமிப்பும் இன்றி சிலை வைக்கப்பட்டிருந்தது. தமிழக முதலமைச்சரும், அரசியல் பிரமுகர்களும், முருகபக்தர்களும் சிலை தைப்பூசம் நிறைவு பெறும் வரை மீண்டும் வைத்து வழிபாடு நடத்த வழி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி