பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக திருவிழா ஏற்பாடுகள் தீவிரம் : பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
Author: Babu Lakshmanan19 January 2023, 8:37 am
பழனி முருகன் கோவில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு, இன்று தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். வரும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு மேலே சென்று சாமிதரிசனம் செய்வதற்கு வசதியாக படிவழிப்பாதை, மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் சேவை ஆகியவை உள்ளன.
இந்நிலையில் ரோப்கார் சேவை வருடத்திற்கு 45 நாட்களும், மாதத்திற்கு 1 நாளும் நிறுத்தபடுகிறது. இதன்படி கும்பாபிசேக பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பராமரிப்பு பணி காரணமாக இன்று ஒரு நாள் நிறுத்தப்படும் என பழனி திருக்கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
மேலும் பராமரிப்பு பணியின் பொழுது ரோப்காரில் ஏற்பட்டுள்ள பழுதுகள் சரிசெய்யப்பட்டு, ரோப்கார் பெட்டிகள் வர்ணம் பூசபட்டும் ,பராமரிப்பும் மேற்கொள்ளப்பட்டு நாளை மீண்டும் செயல்படும் என தெரிவித்துள்ளது.
எனவே, இன்று ஒருநாள் மட்டும் பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின் இழுவை ரயில்களில் சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது