30ம் தேதி பழனி கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்… சுவாமி தரிசனம் செய்யும் நேரம் குறைப்பு… சூரசம்ஹாரத்தை முன்னிட்டு கோவில் நிர்வாகம் அறிவிப்பு
Author: Babu Lakshmanan28 October 2022, 1:09 pm
பழனி கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.30மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த 25ம்தேதி கந்தசஷ்டி திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சூரசம்ஹாரம் அன்று காலை 11.30 மணிக்குமேல் பழனி கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- சூரசம்காரம் அன்று அதிகாலை 4.00 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், 4.30 மணிக்கு விளாபூஜையும் நடைபெறும். 11 மணியளவில் கட்டண பூஜைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, உச்சிகால பூஜை மற்றும் சாயரட்சை பூஜைகள் நடத்தப்பட்டு 2.45 மணியளவில் கோவில் நடை அடைக்கப்படும்.
எனவே, காலை 10 மணிக்கு மேல் ரோப்கார், மின்இழுவை ரயில் ஆகிய சேவைகள் நிறுத்தப்படும். படிவழியில் 11.30 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். சூரசம்ஹாரம் நிறைவடைந்து மறுநாள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவர், என தெரிவிக்கப்பட்டுள்ளது.