அந்த திமுக எம்எல்ஏ என்னோட தொகுதிக்குள் வந்தால் அவ்வளவு தான்… மக்களை திரட்டி போராடுவேன் ; அதிமுக எம்எல்ஏ எச்சரிக்கை..!!

Author: Babu Lakshmanan
1 July 2023, 6:45 pm

அடுத்த தொகுதி திமுக எம்எல்ஏ என்னுடைய தொகுதிக்குள் வந்தால் முற்றுகை போராட்டம் செய்வேன் என்று பல்லடம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ் எம் ஆனந்தன் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- பல்லடம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளேன். கடந்த இரண்டு ஆண்டு காலமாக திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றத்திலிருந்து இதுவரைக்கும் எந்த வளர்ச்சி பணியும் செய்யவில்லை. நான் பல்லடம் ஏம்.எல்.ஏ ஆனதற்கு பின்பு, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி கொண்டிருக்கிறேன்.

விடியா திமுக அரசின் சார்பாக எந்த ஒரு திட்டமும் இதுவரை கொண்டுவரப்படவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், இன்றைக்கு என்ன நிலைமை என்றால் தொகுதி மேம்பாட்டிற்காக அரசின் நிதிகள் வருகின்றது. பல்வேறு திட்டங்களுக்காக செயல்படுத்தப்படுகின்றன. அந்த திட்டப் பணிகளுக்காக அரசு அதிகாரிகள் யாரும் என்னை அழைப்பதில்லை. அதேபோல, இந்த தொகுதி பணிகளுக்கு அடுத்த தொகுதியான திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக மாவட்ட செயலாளரான செல்வராஜ் அவர்கள் பல்லடம் தொகுதிக்குள் அத்துமீறி நுழைந்து பூமி பூஜைகள் செய்வது மற்றும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது போன்ற செயல்களை செய்து வருகிறார்.

திருப்பூர் மாவட்டத்தில் திமுக கோஷ்டி பூசல் உள்ளதால் மாவட்ட அமைச்சர் மு.பே சாமிநாதனும், மாவட்ட செயலாளர் செல்வராஜீம் ஒரே பணிக்கு தனித்தனியாக பல்லடம் தொகுதியில் பூமி பூஜை செய்கின்றனர். வரும் காலங்களில் திமுக மாவட்ட செயலாளர் பல்லடம் தொகுதிக்குள் வந்து பூமி பூஜை அல்லது அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நானும் அதிமுக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து திமுக மாவட்ட செயலாளரை முற்றுகை செய்து போராட்டத்தில் ஈடுபடுவேன்.

சட்டமன்ற நிதி வருடத்திற்கு மூன்று கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், மக்களுக்கு அன்றாட சந்திக்ககூடிய சிறு சிறு பிரச்சனைகள் ஆன சாலை வசதி, தண்ணீர் தொட்டி, அங்கன்வாடி, ரேசன் கடை போன்றவற்றை நிறைவேற்றி தருகிறோம். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை பல்லடம் தொகுதிக்கு நிறைவேற்றி தந்துள்ளோம். ஆனால் இந்த இரண்டு ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றவில்லை. பல்லடத்தின் பிரதான பிரச்சனையான போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கடந்த ஆட்சி காலத்தில் புறவழிச்சாலை அமைக்க 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால் இந்த திட்டம் அதிமுக காலத்தில் கொண்டுவரப்பட்டதால், தற்போதைய திமுக அரசே அதை நிறைவேற்ற அந்தத் திட்டத்தை கையில் எடுக்காமல் உள்ளது. இதுகுறித்து சட்டமன்றத்தில் பலமுறை உரையாற்றி உள்ளேன். மேலும், நெடுஞ்சாலை துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தும் இதுவரைக்கும் எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. முதலமைச்சர் உங்கள் தொகுதியில் 10 கோரிக்கை என்ற திட்டத்தில் அறிக்கை கேட்டார். அதில் பல்லடம் தொகுதிக்கு பத்து கோரிக்கைகள் என்னவென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். அதில் எந்த கோரிக்கையும் நிறைவேற்ற சாத்தியம் இல்லை.

சாத்தியமில்லை என தெரிந்தால் எதற்கு கோரிக்கை கேட்கிறார்கள் என தெரியவில்லை. மேலும், மக்களை சந்திக்க முடியாத அவல நிலையை இந்த ஆட்சி உருவாக்கியுள்ளது. அடுத்த தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் இங்கே வந்து மக்களை சந்திக்கும் போது, இந்த தொகுதி எம்எல்ஏ இங்கு வருவதில்லை. மக்கள் பிரச்சனைகளை கேட்பதில்லை என ஒரு பொய்யான குற்றச்சாட்டை மக்களிடையே உருவாக்கி வருகிறார். இனிமேல் அடுத்த தொகுதி எம்எல்ஏவான செல்வராஜ் கட்சி நிகழ்ச்சிகள் தவிர அரசு நிகழ்ச்சிகாக பல்லடம் தொகுதிக்குள் வந்தால் நான் எனது கட்சி நிர்வாகிகளுடன் மிகப்பெரிய முற்றுகை போராட்டத்தை நடத்துவேன்.

மேலும், திருப்பூர் மாவட்டத்திற்குள் மக்கள் பிரச்சனை உள்ள நிலையில் அமைச்சர் ஒரு கோஷ்டி, மாவட்ட செயலாளர் ஒரு கோஷ்டி, மேயர் ஒரு கோஷ்டி என தனித்தனியாக பிரிந்து இருப்பதால் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு, தெற்கு, பல்லடம் ஆகிய மூன்று தொகுதியில் எந்த ஒரு மக்கள் பணியும் நடப்பதில்லை, என தெரிவித்தார்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 480

    0

    0