பல்லடத்தில் செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு… கரூரில் வீதியில் இறங்கி செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…!
Author: Babu Lakshmanan25 January 2024, 2:39 pm
பல்லடம் அருகே தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தை கண்டித்து கரூரில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
பல்லடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு என்பவர் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினருக்கு செய்தியாளர் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்த காவல்துறையை கண்டித்தும் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய கோரியும், பல்வேறு மாவட்டங்களில் செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்ட பிரஸ் கிளப் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல, திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதி நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மர்ம கும்பலால் தாக்கப்பட்டதற்கு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி
கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, செங்குன்றம், ஆரணி, பெரியபாளையம் பத்திரிகையாளர்கள் பொன்னேரியில் அம்பேத்கர் சிலை முன்பாக கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறையினரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.