மூன்றரை வருஷமா குடிநீருக்கு போராடுறேன்.. அமைச்சர் பொன்முடியிடம் திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் காரசாரம்!

Author: Udayachandran RadhaKrishnan
2 October 2024, 3:45 pm

ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அமைச்சர் பொன்முடியிடம் சரமாரிக் கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விழுப்புரம் அருகே உள்ள வி.புத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி கலந்துகொண்டார்.

இந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியின் கணக்கு வழக்குகள் குறித்தும், 18 வகையான முக்கிய தேவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடம் பொதுவான குறைகள் இருந்தால் கூறும்படி அமைச்சர் பொன்முடி கேட்டுக்கொண்டார்; அப்போது, வி. புத்தூர் ஊராட்சி மன்ற தலைவி பூர்ணிமா அவர்களின் கணவர் திமுகவை சேர்ந்த சிவராஜ் என்பவர் கடந்த 3½ ஆண்டுகளாக குடிநீர் வேண்டி போராடி வருவதாக தெரிவித்தார் இதனைக் கேட்ட அமைச்சர் மூன்றரை ஆண்டு காலமாக போராடினாயா? ஏன் என்னிடம் வந்து கூறவில்லை.

இதுவரை என்னை பார்த்து குடிநீர் பிரச்சினை இருப்பதாக தெரிவித்தாயா ? தெரிவித்திருந்தால் உடனடியாக சரி செய்து இருப்பேன் என்று கூறி பின்னர், பொதுமக்களிடம் உடனடியாக தென்பெண்ணை ஆற்றில் இருந்து அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கும் குடிநீர் இணைக்கப்படும் என கூறினார்.

திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அமைச்சரிடம் குடிநீர் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பிய சம்பவம் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அமைச்சரிடம் கோரிக்கையை முன்வைக்க முற்பட்டபோது அருகில் இருந்த திமுக நிர்வாகிகள் அவரிடம் இருந்து மைக்கை வாங்கி உடனடியாக சரி செய்யப்படும் என அவரை வேறுபக்கம் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 657

    0

    0