இரண்டு வருடங்களுக்கு பிறகு களைகட்டிய பண்ணாரி அம்மன் கோவில் திருவிழா : குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!!
Author: Udayachandran RadhaKrishnan22 March 2022, 2:47 pm
ஈரோடு : இரண்டு வருடங்களுக்கு பிறகு பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் பண்ணாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் குண்டம் திருவிழாவில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.
கொரோனா பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டு குண்டம் திருவிழா நடைபெறவில்லை. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டம் திருவிழாவில் பூசாரி மட்டுமே குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் பண்ணாரி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு மார்ச் 7ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் குண்டம் திருவிழா தொடங்கியது.