மருத்துவ உதவியாளர் மரணம்.. சைரனுடன் ஊர்வலமாக வந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் : இறுதிச்சடங்கில் நெகிழ்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2024, 10:24 am

கரூரில் தனியார் ஆம்புலன்ஸில் பணிபுரிந்த மருத்துவ உதவியாளரின் இறுதிச் சடங்குக்காக பிரேதத்தை எடுத்துச் செல்லும்போது சைரன் ஒலி எழுப்பிக் கொண்டு ஆம்புலன்ஸ்கள் வரிசை கட்டி சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் தின்னு விஜய் (30). இவர் கரூர் மாநகரில் தனியார் ஆம்புலன்ஸ்க்கு மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி கழுத்து வலி ஏற்பட்டு அதன் காரணமாக வலி நிவாரணத்திற்காக ஊசி மருந்து எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி தின்னு விஜய் உயிரிழந்துள்ளார்.

தொடர்ந்து மருத்துவக் கல்லூரி பிணவறையில் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து அவரது உடல் பெறப்பட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக இறுதி சடங்கிற்காக சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அப்போது சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்கள் சைரன் ஒலி எழுப்பிக் கொண்டு கொளந்தானூர் வழியாக வரிசை கட்டி சென்றுள்ளனர்.

அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது மட்டுமே ஆம்புலன்ஸ்கள் சைரன் ஒலி எழுப்ப வேண்டும் என்று விதி இருக்கும்போது, மருத்துவ உதவியாளர் ஒருவரின் உடல் எடுத்துச் செல்லும் போது, இவ்வாறு நிகழ்ந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 315

    0

    0