விவசாயிகளை அழைத்து மிரட்டுவதா…? தமிழக அரசுக்கு பாலகிருஷ்ணன் எச்சரிக்கை : ஒப்பந்த செவிலியர்களுக்கு ஆதரவாகவும் வாய்ஸ்!!
Author: Babu Lakshmanan6 January 2023, 8:36 am
விமான நிலைய அமைவதற்கு ஏதோ ஒரு வகையில் விவசாயிகளை அழைத்து மிரட்டுவது போல் நடந்து கொள்வதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், சட்ட விதிகளை மீறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதி அளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஏற்று காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக வழங்கப்பட்ட நிதியினை பெற்றுக் கொண்ட தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவர் கூறியதாவது :- புதிய விமான நிலையம் அமைப்பதோ அல்லது தொழிற்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் போன்ற பணிகள் எல்லாம் வளர்ச்சி என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றினாலும், அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, விவசாயிகளின் உரிமைகளை எல்லாம் காவு கொடுத்து அமைவதெல்லாம் உண்மையான வளர்ச்சியாக இருக்காது. அது மக்களின் வளர்ச்சியாக கருதப்படாது.
மேலும் பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கு சுற்றுச்சூழல் அறிக்கை இதுவரை பெறப்படவில்லை. அங்கிருக்கும் மக்களின் கருத்துக்களை கேட்கவில்லை. கருத்துகளைக் கேட்பது போல் விவசாயிகளை அழைத்து, ஏதோ ஒரு வகையில் விவசாயிகளை மிரட்டுவது போல் நடந்து கொள்வது ஆகியவற்றை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
மேலும் அங்கு விமான நிலையம் அமைக்க வேண்டிய அவசியம் இருந்தால் சட்டப்படி சுற்றுச்சூழல் ஆய்வு மதிப்பீடு அறிக்கை தயாரித்து, நிலம் கையகப்படுத்தும் சட்டம் என்ன கூறுகின்றதோ, அந்த விதிகளுக்குட்பட்டுதான் நிலங்களை கையகப்படுத்த வேண்டும்.
அந்த சட்டத்தில் நிலம் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களின் ஒப்புதல்படி தான் நிலத்தை கையகப்படுத்த இயலும் என உள்ளது. அவர்களின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்த இயலாது. எனவே, பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கு விதிகளை மீறி நிலத்தை கையகப்படுத்தக் கூடாது.
மேலும், தமிழக அரசு மக்களுக்கான நல்ல திட்டங்களை நல்ல நிவாரணங்களை செயல்படுத்த வேண்டுமே தவிர, பணியில் இருக்கும் செவிலியர்களை பணி நீக்கம் செய்வது, ஒப்பந்த அடிப்படையில் தான் வேலைக்கு ஆள் எடுப்பது, அவுட்சோர்சிங் முறையில் தான் ஆள் எடுப்பது, இதெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள மக்களின் நலன்களை பாதுகாக்க உதவாது, அது மட்டுமல்ல இது போன்ற செயல்கள் எல்லாம் தமிழக அரசுக்கு நல்ல பெயரை ஈட்டி தராது, எனவும் கூறினார்.