பெற்ற மகளின் ஆபாச வீடியோக்களை விற்ற பெற்றோர்.. அடுத்தடுத்து கைதாகும் புள்ளிகள்!
Author: Hariharasudhan17 January 2025, 11:11 am
சென்னையில் பெற்ற மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அதனை வீடியோ எடுத்த விற்ற பெற்றோர் மற்றும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: சென்னையில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதாக, குழந்தைகள் நல அமைப்பு தரப்பில் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒருவர் ஆன்லைன் மூலம் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்திய போலீசார், அவரது செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.
அப்போது, அதில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும், அவர்களுக்குத் தெரியாமலே எடுக்கப்பட்ட வீடியோக்கள் செல்போனில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில், தனது மனைவியுடன் சேர்ந்து 10ஆம் வகுப்பு படிக்கும் தனது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அதிர்ச்சி தகவல் வெளியானது.

மேலும், அதனை வீடியோவாக எடுத்து ஆன்லைனில் விற்பனை செய்ததும், இதேபோல், அப்பகுதியில் உள்ள பல சிறுமிகளை வீடியோ எடுத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் தம்பதியைக் கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் பயங்கரம்… திருப்பதி தரிசனத்தை முடித்து திரும்பிய திருச்சி பக்தர்கள் 4 பேர் பலி!
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சீனிவாசபுரத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் தாம்பரத்தைச் சேர்ந்த மற்றொருவர் என இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இவர்களால் பாதிக்கப்பட்ட மற்ற சிறுமிகள் யார், ஆபாச வீடியோக்களை இவர்களிடம் இருந்து பயன்படுத்தியவர்கள் யார் என்பது உள்ளிட்ட தகவல்களைச் சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.