உக்ரைனில் சிக்கி தவிக்கும் கோவை மாணவிகள்: பத்திரமாக மீட்டு தரக்கோரி பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை..!!
Author: Rajesh25 February 2022, 10:49 am
கோவை: கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவிகள் உக்ரைனில் சிக்கித் தவிப்பதாகவும், அவர்களை மீட்டுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா இடையே போர் மூண்டுள்ள நிலையில், உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த நாட்டின் பல இடங்களில் இணைய இணைப்புகள், தொலைபேசி சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால் சொந்த நாட்டை தொடர்பு கொள்ளவும் முடியாமல் இக்கட்டான சூழலில் உள்ளனர்.
இந்த சூழலில், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மாணவிகள் மருத்துவப்படிப்புக்கு உக்ரைன் சென்று சிக்கித்தவிப்பதாக பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.
இதில், கோவை கருமத்தம்பட்டி பகுதியில் வசித்துவரும் பொன்னுக்குட்டி, தமிழ்செல்வி தம்பதியினரின் மகள் செல்வி பார்கவி, மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் பகுதியில் செயல்பட்டுவரும் டேனிலோ ஹாலிட்ஸ்கி லிவிவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு மருத்துவம் பயின்று வருகிறார்.
போர் சூழல் காரணமாக பார்கவி தங்கியிருக்கும் இடத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார். இதே போல், உக்ரைன் வின்னிஸ்டியா மாவட்டத்தில் உள்ள பிரோக்கோவ் பல்கலை.,யில் பயின்று வரும் கோவை சூலூரை சேர்ந்த மதன் மோகன் என்பவரின் மகள் ரஞ்சினியும் போர் பதற்றம் நிறைந்த இடத்தில் சிக்கியுள்ளார்.
உயிரை கையில் பிடித்தபடி இருப்பதாகவும், நாடு திரும்ப இந்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழகத்தை சேர்ந்த 40 மாணவிகள் படித்து வருவதாகவும் மாணவி ரஞ்சினி தெரிவித்துள்ளார்.