பட்டுக்கோட்டை பள்ளி மாணவி உயிரிழப்பு.. பெற்றோர் திடீர் வாதம்!

Author: Hariharasudhan
12 February 2025, 9:40 am

தஞ்சை, பட்டுக்கோட்டை அருகே அரசுப் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரியுள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே சொக்கநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் கவிபாலா (13). இவர், அருகே உள்ள பள்ளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்றைய முன்தினம் பிற்பகல் மாணவி பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது கவிபாலா திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில், அவருக்கு மூக்கில் ரத்தம் வந்துள்ளது. இதனைப் பார்த்த புக்கரம்பையைச் சேர்ந்த தியா (15) மற்றும் ஆண்டிக்காட்டைச் சேர்ந்த சகாயமேரி (16) ஆகிய இரண்டு மாணவிகளும் மயக்கமடைந்துள்ளனர்.

பின்னர், இதனைப் பார்த்த ஆசிரியர்கள், உடனடியாக மாணவி கவிபாலாவை மீட்டு, அருகே உள்ள அழகிநாயகியபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கவிபாலா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

Thanjavur School girl death

பின்னர், மாணவியின் உடல், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே, பள்ளியில் மாணவிகளுக்கு குடல்புழு நீக்கம் தொடர்பான மாத்திரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் மயக்கமடைந்த இரண்டு மாணவிகளும், அழகிநாயகியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மாணவியின் பெற்றோர்கள் இழப்பீடு வழங்க கோரிக்கை வைத்தும், மாணவியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்வதற்கு அனுமதியும் மறுத்தனர்.

மேலும், குடல்புழு நீக்கம் மாத்திரையை பரிந்துரை செய்த மருத்துவர் மற்றும் தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும், இந்தக் கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே உடற்கூறு ஆய்வுக்கு அனுமதி வழங்குவோம் எனவும் பெற்றோர் தெரிவித்ததால் குழப்பம் நிலவியது.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ஆகியோர் பெற்றோர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்பட்டதால், உடற்கூறு ஆய்வுக்கு பெற்றோர் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: சனாதனத்திற்கு ஆபத்து வரும்போது.. விஜய் சொன்னது வேதனையே.. வானதி சீனிவாசன் கூறுவது என்ன?

அது மட்டுமல்லாமல், பெற்றோருக்கு இரண்டரை செண்ட் நிலமும் வழங்கியுள்ளனர். மேலும், தடயங்கள் அழியக்கூடாது என்பதால் உடற்கூறு ஆய்வுக்கு பெற்றோர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவி கவிபாலாவின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

  • Thaman viral interview கசப்பான முடிவை எடுத்த இசையமைப்பாளர் தமன்…அந்த பெண் தான் காரணமா..!
  • Leave a Reply