’கவர்னர்’ பீடி.. ’அப்பா’ சொன்னார்.. ஆளுநர் மேடையில் பார்த்திபன் ‘நச்’ பேச்சு!
Author: Hariharasudhan25 March 2025, 9:41 am
எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாததற்கு காரணம் என்னுடைய அப்பா என நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சிபடத் தெரிவித்தார்.
சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன், “நான் சிகரெட் பிடிக்க மாட்டேன். நடிக்கும்போது கூட, உங்களுக்கு சரியாக சிகரெட் கூட பிடிக்கத் தெரியவில்லை என்று சக நடிகைகள் கூறுவர். எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாததற்கு காரணம் என்னுடைய அப்பா. அவர் நிறைய பீடி பிடிப்பார்.
அவர் குடித்த பீடியின் பெயர் கவர்னர் பீடி. தயவுசெய்து இதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இது ஜோக் அல்ல, அந்த காலத்தில் இப்படியொரு பீடி இருந்தது. ஆனால், இப்போது அது இல்லை. இதனை எதற்காக நான் சொல்கிறேன் என்றால், ஒரு பீடிக்குப் பெயர் வைக்கும்போது எப்படி கவர்னர் பீடி பெயர் வைக்க முடியும்?

அது எவ்வளவு உயர்ந்த பதவி? அந்தப் பதவியை ஒரு பீடிக்கு பெயராக வைப்பது என்பது வன்முறையைத் தடுக்கத் தகுந்த விஷயம். அந்தப் பீடியை என் அப்பா என்னைப் போய் வாங்கிவரச் சொல்வார். அதைக் குடித்து கடைசிகாலத்தில் எனது அப்பா கேன்சர் வந்து இறந்ததை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
அது எனக்குள் மிகப்பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தியது. காசநோய் வருவதற்கான காரணங்களில் புகை பிடிப்பதும் ஒன்று என்பதால் இதனைச் சொல்கிறேன். இந்த நிகழ்ச்சியை யார் நடத்துகின்றனர் என்பது மிகமிக முக்கியமானது. நிகழ்ச்சியில் தமிழ் அழகாக மணந்து வருகிறது.
இதையும் படிங்க: ’தமிழக அரசின் மீது ஊற்றப்பட்ட மலம்’.. சவுக்கு சங்கர் கடும் தாக்கு. சிபிசிஐடிக்கு கைமாறிய வழக்கு!
தமிழ்நாட்டில் தமிழ்ப் பண்பாடு இவ்வளவு அழகாக பாதுகாக்கப்படுவதற்காக ஆளுநருக்கு என்னுடைய மரியாதையைத் தெரியப்படுத்துகிறேன். நான் தமிழில் பேசியது, ஆளுநருக்குப் புரியுமா என்று கேட்டேன். ஆளுநர் தமிழ் கற்றுக் கொள்கிறார், அவருக்குப் புரியும், அதனால் தைரியமாக தமிழிலேயேப் பேசலாம் எனச் சொன்னார்கள்.
எனவே, தமிழ்ப் புத்தகங்களை அவருக்கு நான் பரிசளித்துள்ளேன். ஒரு மனிதன் பேச ஆரம்பித்த 5 நிமிடங்களில் அவன் யார் என ஆளுநருக்கு எடைபோடத் தெரிகிறது” எனத் எனத் தெரிவித்தார்.