ட்ராமா எல்லாம் வேண்டாம் என சொன்ன ஏ.ஆர்.ரகுமான்…மேடையில் மைக்கை விட்டெறிந்த பார்த்திபன்: ‘இரவின் நிழல்’ விழாவில் சர்ச்சை..!!
Author: Rajesh2 May 2022, 1:48 pm
சென்னை: இரவின் நிழல் பாடல் வெளியிட்டு விழாவில் கோபமடைந்த பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்ததால் ஏ.ஆர்.ரகுமான் அதிர்ச்சியடைந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் இயக்குநர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ‘இரவின் நிழல்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். 96 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நினைவு பரிசாக அவரது தாய் மற்றும் தந்தை உருவப்படம் பதிக்கப்பட்டுள்ள இசை வடிவ கேடயத்தை இயக்குநர் பார்த்திபன் வழங்கினார். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பேசிய இயக்குநர் பார்த்திபன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பாடல் பற்றி சொல்லுங்கள் என்று கேட்க, ஏ.ஆர்.ரஹ்மானோ ட்ராமால்லாம் வேண்டாம். பாடலை திரையிட்டு விடலாம் என்றார்.
அப்போது பார்த்திபனின் மைக் வேலை செய்ய வில்லை என்று தெரிகிறது. இதனால் கோபமடைந்த பார்த்திபன் மைக்கை கீழே இருந்தவரை நோக்கி வீசினார். இதைப்பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து மேடையில் பேசிய பார்த்திபன் ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மானின் கொடுத்த கேடயத்தை தூக்கி வந்ததால் கை மிகவும் வலியாக இருந்தது. அந்த நேரத்தில் மைக் வேலை செய்ய வில்லை என்றதும் கோபம் வந்து விட்டது.
ஆனால் இது அநாகரிகமான விஷயம்தான் என்னை மன்னித்துவிடுங்கள் என்று பேசினார். நிகழ்ச்சியில் இயக்குநர் சமுத்திரகனி, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, பாடலாசிரியர் மதன் கார்க்கி, இயக்குநர் கரு பழனியப்பன் மற்றும் பாடகி ஷோபனா சந்திரசேகர்ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.