சரியான சில்லறை கொடுக்காத பயணிக்கு அடி, உதை : தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தாக்கும் வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2022, 8:41 pm

சரியான சில்லறை தராத பயணியை சரமாரியாக தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அன்னூர் அருகே தனியார் பேருந்தில் டிக்கெட் எடுக்க சரியான சில்லறை கொடுக்காத பயணியை ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த பொங்கலூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ரங்கசாமி. வேலை நிமித்தமாக அன்னூரில் இருந்து புளியம்பட்டி செல்வதற்காக என்.எம். எஸ் எஸ்‌.ஆர்‌.டி என்ற தனியார் பேருந்தில் ஏறியுள்ளார்.

பயணச்சீட்டு வாங்கும்போது ரங்கசாமி நடத்துனரிடம் சரியான சில்லரை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நடத்துனர் கடிந்து கொண்ட நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால், சத்தியமங்கலம் சாலையில் பசூர் அருகே பேருந்தை நிறுத்திய ஓட்டுனர், நடத்துனர் உடன் இணைந்து ரங்கசாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அப்போது கீழே இறங்கிய ரங்கசாமியை இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் ரங்கசாமிக்கு கழுத்துப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனை வீடியோ எடுத்த வாகன ஓட்டி ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்து பேஸ்புக் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கனவே தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அதிவேகமாக இயக்கி விபத்துகளை ஏற்படுத்துவது, பாதுகாப்பின்றி படியில் தொங்கி கொண்டு செல்லும் அளவுக்கு, கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்வது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், தனியார் பேருந்து ஊழியர்கள் சில்லரைகாக பயணி ஒருவரை தாக்கிய சம்பவம் பேருந்து பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  • Gnagai Amaran Admitted in ICU தீவிர சிகிச்சையில் கங்கை அமரன்… திடீர் உடல்நலம் மோசமடைந்ததால் பரபரப்பு!!
  • Views: - 738

    1

    0