சிறுபான்மையினரை இழிவுப்படுத்தினாரா துணை முதலமைச்சர் : கமிஷ்னர் அலுவலகத்தில் பரபர புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2024, 4:41 pm

சிறுபான்மை சமூக மக்கள் குறித்தும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் சமூக பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் அளித்துள்ளார்.

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேசிய பேச்சுக் குறித்து அண்மையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விமர்சனம் செய்திருந்தார்.

இதன் அடிப்படையில் பவன் கல்யாணம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையிலான குழுவினர் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ‘திருப்பதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் நடிகர் பவன் கல்யாண் பேசிய பேச்சு எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களை குறி வைத்து வெறுப்பை விதைக்கும் வண்ணம் நேரடியாகப் பேசியுள்ளார். அந்தப் பேச்சு வெளியாகியுள்ள பத்திரிகைகளை செய்திகளை வைத்து, பவன் கல்யாண் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம்.

‘ஏசு மற்றும் அல்லா குறித்து தவறாகப் பேசினால் நாட்டையே தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். ஆனால் நாங்கள் ஏன் கொந்தளிக்கக்கூடாது?’ என அவர் பேசியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் எப்போது நடைபெற்றன? பவன் கல்யாண் பேசியிருப்பது பழைய இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ கீழ் குற்றமாகும்.

புதிய தண்டனைச் சட்டம் பிரிவு 196-1ஏ, 197-1டி, 352 ஆகிய பிரிவுகளின் கீழ் நேரடியாக தண்டனைக்குரிய குற்றமாகும். தமிழ்நாடு, ஆந்திர மாநில மக்களிடையே வெறுப்பை, பகையை உருவாக்கும் விதமாக பேசியிருக்கிறார்.

அனைத்து மக்களும் சமத்துவமாக மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்பதுதான் அரசியல் சட்டத்தின் நோக்கம். அதை சீர்குலைக்கும் விதமாக இந்துக்களை, இஸ்லாமியர்கள், கிறித்தவர்களுக்கு எதிராகத் தூண்டும் வகையில் இவ்வாறு பேசியுள்ளார்.

எனவே பவன் கல்யாண் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் உதவி ஆணையரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்’ என்றார்.

மேலும் அவர், திருப்பதி லட்டு விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் என்ன தொடர்பு? ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் இந்து நிறுவனங்கள்தானே.

அதனைப் பரிசோதனை செய்கின்ற அதிகாரி இந்து. திருப்பதி கோவிலின் சமையலறையில் இருப்பவர்கள் வைதீக பிராமணர்கள். கலப்படமாக நெய் வந்தால் அதனைக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இவர்களுக்குதான் உண்டு. இவர்களைக் குறித்து ஏன் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் பேச மறுக்கிறார்?’ என்றார்

மேலும் அவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியிருந்தார். சாதிய, வர்ணாசிரம, கொடுங்கோன்மைக் கட்டமைப்பு என்பதுதான் சனாதனம். பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பிப்பதுதான் சனாதனம். இது அரசியல் சட்டத்திற்கு நேரெதிரானது. இதை ஒழிக்க வேண்டும் என அம்பேத்கர் பேசியுள்ளார்.

இதுகுறித்து பவன் கல்யாண் பேசியிருப்பது உதநிதியை மட்டுமல்ல தமிழக மக்களையும், அம்பேத்கரையும் இழிவு செய்துள்ளார். வர்ணாசிரமக் கட்டமைப்புக் குறித்து தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வரும் திராவிடக் கட்சியின் பிரதிநிதி ஒருவர் பேசினால் தவறா? அவருக்கும் கருத்துரிமை உள்ளது. அதற்காக அவரை ஒருமையில் விமர்சிப்பது சரியல்ல. இதனை அனைத்துக் கட்சிகளும் கண்டிக்க வேண்டும்’ என்றார்.

  • Sawadeeka Songஅட்டகாசகமாக வெளிவந்த விடாமுயற்சி “Sawadeeka”பாடல்…இருங்க பாய் இது ஆரம்பம் மட்டும் தான்..!
  • Views: - 353

    0

    0