‘போட்டிக்கு நானும் வரலாமா’…கச்சா எண்ணெய்யுடன் போட்டி போடும் நல்லெண்ணெய்: கிடுகிடு விலை உயர்வால் மக்கள் கலக்கம்..!!
Author: Rajesh8 ஏப்ரல் 2022, 4:56 மணி
உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக சமையல் எண்ணெய் விலை இருமடங்காக உயர்ந்துள்ள நிலையில் தற்போது நல்லெண்ணெய்யும் விலை உயர்ந்துள்ளது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து 40 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் போரின் தாக்கம் மற்றும் பாதிப்பு சர்வதேச அளவில் எதிரொலித்து வருகிறது. போர் காரணமாக சமையல் எண்ணெய் விலை இருமடங்காக உயர்ந்துள்ள நிலையில், போருக்கு முன் ரூ.100ஆக இருந்த ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் விலை தற்போது ரூ.200ஆக விற்பனையாகிறது.
தற்போதுள்ள சூழலில் சுத்திகரிக்கப்பட்ட ஆலிவ் எண்ணெயின் விலை பொதுவாக சூரியகாந்தி எண்ணெயை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால் மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் சூரிய காந்தி எண்ணெயின் தேவை மற்றும் உபயோகம் ஆலிவ் எண்ணெயைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது. தற்போதுள்ள சூழலில் உலகளாவிய சூரியகாந்தி எண்ணெய் விலை கடந்த ஆண்டை விட மார்ச் மாத இறுதியில் 44% உயர்ந்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில் 125 ரூபாயாக இருந்த சூரியகாந்தி எண்ணெய் விலை தற்போது 200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட நல்லெண்ணெய் தற்போது 250 ரூபாய்க்கும் , 180 ரூபாய்க்கு விற்கப்பட்ட கடலை எண்ணெய் தற்போது 220 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மேலும் 160 ரூபாய்க்கு விற்கப்பட்ட தேங்காய் எண்ணெய் தற்போது 200 ரூபாய்க்கும், 110 ரூபாய்க்கு விற்கப்பட்ட ரீஃபைண்ட் ஆயில் தற்போது 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து செலவினங்கள் அதிகரித்து உள்ளதும் எண்ணெய் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் வரும் காலங்களில் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை உயரலாம் எனவும் கூறப்படுகிறது.
0
0