மூடியே கிடந்த அரசு மருத்துவமனை… ஆட்சியரின் வருகையையொட்டி திடீரென திறப்பு ; வசூல் ராஜா பட பாணியில் நடந்த கூத்து..!!

Author: Babu Lakshmanan
3 October 2023, 11:21 am

திருவள்ளூரில் கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்றதால் மூடி கிடந்த மருத்துவமனையை திடீரென திறந்துள்ளதாகவும், மக்களை ஏமாற்றுவதை போன்று ஆட்சியரையும் ஏமாற்றுவதாக கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் ஆட்சியரிடம் தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

திருவள்ளூர் மாவட்டம் வண்ணிப்பாக்கம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம் தலைமையில் கிராம சபை நடைபெற்றது.

அப்போது பார்வையாளராக கலந்து கொண்ட ஆட்சியரிடம் தங்கள் பகுதியில் இருந்து பல்வேறு ஊராட்சிகளுக்கு குடிநீர் செல்லும் நிலையில் தங்கள் கிராமத்திற்கு போதிய குடிநீர் இல்லை என்றும், பள்ளிக்கு கழிப்பிட வசதி வீட்டுமனை பட்டா விளையாட்டு திடல் போன்றவற்றை அமைத்து தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

மேலும், ஊராட்சியில் திறக்கப்பட்ட ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடம் மூடியே இருந்ததாகவும், ஆட்சியர் கிராம சபையில் பங்கேற்க வருவதை அறிந்து இன்று மருத்துவமனையை திறந்து வைத்துள்ளதாகவும், மருத்துவமனையை திறக்காமல்
மக்களை ஏமாற்றுவதாகவும், இன்று ஆட்சியர் வந்ததால் நோயாளிகளுக்கு படுக்கை வசதி ஏற்படுத்துவதை போன்று தயார் செய்து உங்களையும் ஏமாற்றுவதாகவும் அப்பகுதியினர் குற்றம்சாட்டினர்.

எனவே, நிரந்தரமாக கர்ப்பிணி பெண்கள் பொதுமக்கள் சிகிச்சை பெரும் வகையில் மருத்துவமனையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு காண்பதாக உறுதி அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கூறியதாவது :- விவசாய நிலங்களில் உள்ள மதுபான கடைகளை மூடக்கோரி கிராம சபைகளில் பொதுமக்கள் தீர்மானம் இயற்றினால், அது குறித்து துறை அதிகாரிகளிடம் தெரிவித்து மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

சாலைகளில் சுற்றும் கால்நடைகள் மற்றும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். கால்நடைகளை பறிமுதல் செய்து 5000 ரூபாய் அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம், என தெரிவித்தார்.

  • singampuli shared the experience on mayandi kudumbathar movie நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன், ஆனா அவர்தான் என்னைய?- ஓபனாக போட்டுடைத்த சிங்கம்புலி…