எங்க ஓடவா பார்க்க.. டிரோன் மூலம் விரட்டிய கிராம மக்கள்.. செங்கல்பட்டில் மிரட்டிய சம்பவம்!
Author: Hariharasudhan9 January 2025, 12:42 pm
செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே திருட முயன்ற நபர்களை டிரோன் மூலம் கிராம மக்கள் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர், வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று உள்ளார். அப்போது, அவரது இளைய மகன் சூர்யா, தன்னுடைய நிலத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவரது வீட்டில் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
இதன்படி, இருசக்கர வாகனத்தின் அருகில் ஒருவர் சூர்யாவின் வீட்டின் முன் நின்று கொண்டிருந்துள்ளார். மேலும் இருவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கொண்டிருந்துள்ளனர். இதனைப் பார்த்த சூர்யா, கத்தி கூச்சலிட்டு உள்ளார். இதனால், அங்கிருந்து 3 பேரும் தப்பி ஓடியுள்ளனர்.
இதில் இருவர் தண்ணீர் நிறைந்த வயல்வெளிக்குள் ஓட்டம் பிடித்து உள்ளனர். மற்றொருவர் உடனடியாக அங்கிருந்து தலைமறைவாகி உள்ளார். இதனிடையே, இது குறித்து ஊர் மக்களிடம் சூர்யா கூறியுள்ளார். இதன்படி, டிரோன் கேமரா மூலம் ஏரிப் பகுதியில் இருவரை தேடி உள்ளனர்.
இதனையடுத்து, ஏரியின் நடுவே நீந்திக் கொண்டிருந்த இருவரை பொதுமக்களில் சிலர் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். தொடர்ந்து, இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதன்படி சம்பவ இடத்துக்கு வந்த மதுராந்தகம் போலீசார், இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதையும் படிங்க: மருதமலைக்கு போறீங்களா? பொங்கலை முன்னிட்டு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் திடீர் கட்டுப்பாடு!
இந்த விசாரணையில், இவர்கள் சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜான்சன் மற்றும் சஞ்சய் என்ற இளைஞர்கள் என்பது தெரிய வந்தது. பின்னர், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், தப்பியோடி தலைமறைவாக உள்ள மற்றொருவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.