விடை கொடு எங்கள் நாடே.. தமிழகத்தை விட்டு ஆந்திராவில் தஞ்சமடையும் பரந்தூர் மக்கள் : 700 நாள் போராட்டத்துக்கு முடிவு!
Author: Udayachandran RadhaKrishnan15 June 2024, 6:40 pm
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டை விட்டு வெளியேற ஏகனாபுரம் கிராம மக்கள் முடிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட மறுத்து நிலம் எடுப்பு பணிகளை மேற்கொள்வதாக கிராம மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், அண்டை மாநிலமான ஆந்திரா அரசிடம் தஞ்சம் கேட்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். தஞ்சம் கேட்டு, வரும் திங்கட்கிழமை சித்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம், ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு போராட்ட குழு அறிவித்துள்ளது. பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து 690 நாட்களாக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் தொடர் போராட்டத்தை சற்று கூட கண்டுகொள்ளாத தமிழக அரசின் எதேச்சாதிகார போக்கை கண்டித்து, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், விவசாயிகள் வாழ தகுதி இல்லாத தமிழ்நாட்டை விட்டு விவசாயத்தையும் ,நீர்நிலைகளையும் காக்க போராடி வரும் விவசாய மக்களின் உணர்வுகளை மதிக்காமல் நில அபகரிப்பான அறிவிப்புக்களை வெளியிட்டு வரும் தமிழ்நாடு அரசை கண்டித்து ,விவசாயிகள் வாழ தகுதி இல்லாத தமிழ்நாட்டை விட்டு வெளியேறுதை பெருமையாக கருதுகிறோம் . எனவே சொந்த மண்ணில் ,மானம் இழந்து அகதியாக வாழ்வதை விட, மொழி தெரியாத அன்னிய ஆந்திர மாநிலத்தில் அடிமையாக வாழ்வது என்று ஒட்டுமொத்த பொது மக்களின் கூற்றுப்படி முடிவு செய்து உள்ளோம்.
எனவே வாழ்விடம் கேட்டு ஆந்திர மாநிலத்திடம் தஞ்சம் அடைய எங்களுடைய போராட்ட குழுவினர் மரியாதைக்குரிய சித்தூர் மாவட்ட ஆட்சியர் தலைவர் அவர்களை சந்திக்க செல்கின்றனர். ஆந்திர மாநிலத்தை நோக்கி கண்ணீர் பயணம் மேற்கொள்ளும் எங்களுடைய போராட்ட குழுவினரை வழி அனுப்ப ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம பொதுமக்கள் அனைவரும் வருகின்ற திங்கட்கிழமை 24.06.2024 அன்று காலை 9.30 மணியளவில் ஏகனாபுரம் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகே திரள உள்ளனர் என்ற அறிவிப்பை வெளியிட்டதால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பலமுறை இது போன்ற நவீனமான முறையில் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் செய்யப்போவதாக போராட்ட குழுவினர் அறிவித்துவிட்டு , அனைத்து தடவையும் பின்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.