மரத்தடியில் வசித்த ஆதரவற்ற முதியவர் உயிரிழப்பு: ஏரியா மக்கள் ஒன்றுகூடி அடக்கம் செய்த நெகிழ்ச்சி சம்பவம்..!!
Author: Rajesh25 April 2022, 3:28 pm
கோவை : கோவையில் சாலையோர வசிக்கும் முதியவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த நிலையில் அப்பகுதி மக்களே ஒன்று சேர்ந்து அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியடைய செய்தது.
கோவை சரவணம்பட்டியை அடுத்த சக்தி ரோடு குரும்பபாளையத்தில் உள்ள புளிய மரத்தின் கீழே 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சுமார் ஆறு ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். முதியவருக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் தினந்தோறும் உணவளித்து வந்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சாலையோர கடைகளுக்கு பாதுகாவலனாக இந்த முதியவர் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக இன்று காலை மரத்தின் கீழ் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஊர் மக்கள் ஒன்றிணைந்து முதியவரை அடக்கம் செய்ய முடிவெடுத்து அவருக்கு மாலை இட்டு மரியாதை செலுத்தி சம்பரதாயம் முறைப்படி அடக்கம் செய்தனர்.
சாலையில் யாரேனும் கீழே விழுந்து கிடந்தாலும் யாரும் உதவி செய்யாத இந்த காலகட்டத்தில் ஊர் மக்களே ஒன்றிணைந்து சாலையோர முதியவரை அடக்கம் செய்தது கோவை மக்களிடையே நெகிழ்ச்சி அடைய செய்தது.