‘தினமும் லேட்டாவே தான் வருது’… பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதி ; பேருந்தை சிறைபிடித்து போராட்டம்…!!

Author: Babu Lakshmanan
14 November 2022, 10:34 am

கோவை : சூலூர் அடுத்த நல்லூர் பாளையம் கிராமத்தில் குறித்த நேரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படாததை கண்டித்து பேருந்துகளை சிறை பிடித்து மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நல்லூர் பாளையம் கிராமத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் வேலைக்கு செல்வோர் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.

வழித்தடம் எண் ஆறு மற்றும் வழித்தடம் எண் 105 ஆகிய இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், இரண்டு பேருந்துகளும் குறித்த நேரத்துக்கு இயக்கப்படாமல் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

இதனை கண்டித்து இன்று திடீரென நல்லூர் பாளையம் பகுதியில் பேருந்துகளை சிறை பிடித்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிக்கு செல்வதற்கு எட்டு மணிக்கு வரவேண்டிய பேருந்து ஒரு மணி நேரம் தாமதமாகவும், மாலையில் 4:00 மணிக்கு வரவேண்டிய பேருந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக தாமதமாக வருவதும் சில சமயங்களில் பேருந்துகள் வருவதில்லை எனயும் குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள், உரிய தீர்வு எட்டும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என அறிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக சூலூர் கோட்ட அதிகாரிகள் மற்றும் சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுவரை வருவாய் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் வராத நிலையில், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!