தேசத்துக்காக போராட வேண்டியவர்கள், பாதுகாப்புக்காக போராடுகிறார்கள் : மநீம தலைவர் கமல்ஹாசன் ட்வீட்!!
Author: Udayachandran RadhaKrishnan23 May 2023, 9:10 pm
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக 12 ஆண்டுகளாக பதவி வகிக்கும் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங்களை வென்று தந்த வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா, சாக்சி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறி கடந்த ஜனவரி 18-ந்தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தலைவர் பி.டி.உஷா தலைமையில், மேற்பார்வை குழு அமைக்கப்பட்டது. எனினும், இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், பா.ஜ.க. எம்.பி.யாக இருந்து வரும் சரண் சிங்குக்கு எதிராக, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23-ந்தேதியில் இருந்து மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்களின் சொந்த பாதுகாப்புக்காக போராடும் நிலைக்கு அவர்களை நிர்பந்தித்துள்ளோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்ககதில் வெளியிட்டுள்ள பதிவில், “மல்யுத்த வீரர்களின் போராட்டம் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. நாட்டை பெருமைபடுத்த போராடுவதற்கு பதிலாக, தங்களின் சொந்த பாதுகாப்புக்காக போராடும் நிலைக்கு அவர்களை நிர்பந்தித்துள்ளோம். சக இந்தியர்களே நம் கவனத்துக்கு உரியவர்கள் யார்? தேசிய விளையாட்டு வீரர்களா? அல்லது குற்ற வரலாற்றைக்கொண்ட அரசியல்வாதிகளா?” என்று பதிவிட்டுள்ளார்.