கொலுசு கொடுத்து ஏமாற்றிய அமைச்சருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் : வானதி சீனிவாசன் எச்சரிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan3 December 2022, 5:13 pm
இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் 63வது வார்டில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 18 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை பொதுமக்கள் பயன்பாடிற்காக திறந்து வைத்தார்.
இதற்காக அந்த வார்டு மக்களுக்கு நவீன அட்டை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டு ஒரு நாளைக்கு 20 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், இதுபோன்று இயந்திரங்களை தெற்கு தொகுதியில் ஐந்து இடங்களில் இந்த ஆண்டு நிறுவுவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
கோவை மாநகரில் சாலை வசதிகள் குறித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், சாலை வசதிகளை பொறுத்தவரை தமிழக அரசு கோவை மாநகராட்சிக்கு துரோகம் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுவதில்லை என தெரிவித்தார். மாநகராட்சி தேர்தலின் பொழுது கொலுசு கொடுத்து ஏமாற்றி விட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்த அவர் இதற்கான பாடத்தை கோவை மக்கள் அவருக்கு புகட்டுவார்கள் என தெரிவித்தார்.
மேலும் தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதாகவும் அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளை அவர்கள்(திமுக) புறக்கணிப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
சூயஸ் திட்டம் என்பது 24 மணி நேரம் குடிநீர் வழங்குகின்ற திட்டம் தான் என தெரிவித்த அவர் அதேசமயம் பொது குடிநீர் குழாய்களை அவர்கள் அகற்றினால் இது குறித்து மாநகராட்சியிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.
பாஜக கட்சியில் பெண்களை தரகுறைவாக நடத்துவதாக பாஜக வில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ஏதேனும் சிக்கல்கள் அவருக்கு இருந்திருந்தால் இதற்கென கட்சியில் உள்ள நபர்களிடம் அது குறித்து தெரிவித்து மேல் கொண்டு நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம் எனவும் இனிமேல் கொண்டு அந்த முயற்சிகளை எடுத்தால் சரியாக இருக்கும் என தெரிவித்தார்.
மேலும் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு இன்றைய தேதியில் தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளதாகவும் எவ்வித மாற்றங்களும் இல்லை என பதிலளித்தார். இந்நிகழ்வில் கோவை பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.