பேரறிவாளன் விடுதலையை ஏற்க முடியாது… 33 ஆண்டுகள் என் தாயை இழந்து தவிக்கிறேன்… குண்டுவெடிப்பில் தாயை இழந்த மகன் ஆதங்கம்…!!

Author: Babu Lakshmanan
18 May 2022, 10:24 pm

பேரறிவாளனை விடுதலை செய்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட வெடிகுண்டு சம்பவத்தில் தாயை இழந்த மகன் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை பெற்று வந்த பேரறிவாளன் இன்று விடுதலை செய்யப்பட்டார். தனக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்ப்பை நீதிபதிகள் வெளியிட்டனர். இந்த தீர்ப்புக்கு தமிழக அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்று கூறினார்.

இந்த நிலையில், பேரறிவாளனை விடுதலை செய்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட வெடிகுண்டு சம்பவத்தில் தாயை இழந்த மகன் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது :- இந்த தீர்ப்பு 16 குடும்பங்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தீர்ப்பை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாட்டிற்காக போராடி அவர்கள் ஜெயிலுக்கு போகவில்லை. நாட்டின் பிரதமர் மற்றும் 16 குடும்பத்தை சேர்ந்தவர்களை கொன்று விட்டு, நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை பெற்று, இன்று அதே உச்சநீதிமன்றத்தால் தண்டனையில் இருந்து வெளியாகி இருக்கிறார்கள்.

இன்றைய அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி இவர் வெளியே வந்திருக்கலாம். ஆண்டவன் நல்ல தீர்ப்பு கொடுப்பான். அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று விரைவில் முடிவு எடுப்போம். பேரறிவாளன் விடுதலை என்பது மத்திய, மாநில அரசின் தவறான முடிவு இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் தமிழர்கள் என்பதால் வெளியே விடலாமா? யார் வேண்டுமென்றாலும் என்ன வேணாலும் செய்யலாம். நாட்டின் மீது பற்று உள்ளவர்கள் இதை ஆதரிக்க மாட்டார்கள்.

மத்திய, மாநில அரசு எப்படி இந்த முடிவெடுத்து இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஒரு அமைச்சரவை மட்டுமே எடுத்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது. இதே பிரச்சனை அவர்கள் வீட்டில் நடந்திருந்தால் இந்த முடிவு எடுத்து இருப்பார்களா? ஒருநாள் சிறையில் இருந்து பாருங்கள் என்று அற்புதம்அம்மாள் கூறுகிறார்கள். அது மிகக் கடினமான ஒரு விஷயம் தான்.

ஆனால் 31 ஆண்டுகள் தாய், தந்தையை பிரிந்து கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோமே. என் அம்மாவை பொட்டலம் போல் கட்டி கொடுத்தார்கள். நாங்கள் எதைத்தான் எங்களுடைய வாழ்க்கையில் கண்டோம். படிப்பு, வாழ்க்கை எல்லாம் போய்விட்டது. பாதிக்கப்பட்ட 16 குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கடமை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உண்டு, எனக் கூறினார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 733

    0

    0