காரமடையில் சூறையாடப்பட்ட தந்தை பெரியார் உணவகம்… இருவர் மீது தாக்குதல் : இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது!!
Author: Babu Lakshmanan14 September 2022, 11:55 am
காரமடை அருகே கண்ணார்பாளையத்தில் திறக்கப்பட்ட தந்தை பெரியார் உணவகம் சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள கண்ணார்பாளையம் நால் ரோட்டில் பிரபாகரன் என்பவர் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை இன்று திறக்க உள்ளார். அதற்கான பணிகளில் நேற்று தொழிலாளர்களுடன் ஈடுபட்டு வந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று ஹோட்டல் உரிமையாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கடையை அடித்து நொறுக்கியும் உள்ளனர். கடையின் உரிமையாளரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, கடுமையாக தாக்கியுள்ளனர். அங்கிருந்த அருண்(21) என்பவரையும் தாக்கியுள்ளனர். இதனையடுத்து, கொலை வெறியாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது.
இச்சம்பவத்தில் அருண் என்பவர் படுகாயமடைந்து காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 36 தையல்கள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடையின் உரிமையாளர் பிரபாகரனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காரமடை போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தால் காரமடையில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ரவிபாரதி, விஜயகுமார், சரவணகுமார், சுனில், பிரபு, பிரபாகரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.