உணவகத்தில் புகுந்து அடுப்புக்குள் சிக்கிய கார் : குடிபோதையில் L போர்டுடன் கார் ஓட்டிய பெட்ரோல் பங்க் ஊழியர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2022, 6:29 pm

ஈரோடு : சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்திற்குள் குடிபோதையில் காரை ஓட்டி வந்த நபர் காருடன் கடைக்குள் புகுந்ததால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதி முழுவதும் இன்று முழு கடையடைப்பு நடைபெற்று வந்த நிலையில் மாலை 5 மணி அளவில் சில கடைகள் திறக்கப்பட்டன. இதில் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்.பி.எஸ் கார்னரில் செயல்பட்டு வந்த அசைவ உணவகத்தில் இன்று மாலை திடீரென அதி வேகமாக வந்த கார் ஒன்று கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனத்தை இடித்துத் தள்ளிவிட்டு கடையின் முன்பு இருந்த அடுப்பின் மீது மோதி நின்றது.

இதைக்கண்ட உணவகத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் உடனடியாக சத்தியமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காரை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வரும் ஸ்ரீகாந்த் என்பதும் இவர் தன்னுடைய நண்பர்களுடன் மது அருந்தி விட்டு கடும் குடிபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து உணவகத்திற்கு உள்ளே புகுந்த காரை அப்புறப்படுத்திய போக்குவரத்து காவல்துறையினர் குடிபோதையில் இருந்த நபரை சத்தியமங்கலம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. திடீரென அதி வேகமாக வந்த கார் உணவகத்தில் உள்ளே புகுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி