வேகமாக நிரம்பும் பில்லூர் அணை… பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!
Author: Babu Lakshmanan8 July 2022, 10:05 am
தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பி வருவதால், பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 100 அடியாகும். இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதிகளாக கேரள மாநிலம் அட்டப்பாடி, புள்ளி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர்பவானி, அவலாஞ்சி, குந்தா போன்றவை உள்ளன.
தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக அணையின் நீர்பிடிப்பு மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக பில்லூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் விநாடிக்கு 800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று இரவு வினாடிக்கு 6 ஆயிரம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று அதிகாலை 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணையில் மொத்த கொள்ளளவான 100 அடியில் தற்போது 96 அடி தண்ணீர் உள்ளது. 100 அடி நீர்மட்டம் இருந்தாலும் அணையின் பாதுகாப்பு கருதி அணை 97 அடியை எட்டியதும் திறக்கப்படுவது வழக்கம். 97 அடியை எட்டுவதற்கு இன்னும் ஒரு அடியே உள்ளது.
அதன்பின்னரே அணை திறந்து விடப்படும். தற்போது வரை மின் உற்பத்திக்காக மட்டும் அணையில் இருந்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதற்கிடையே எப்போது வேண்டுமானாலும் அணை திறக்கப்பட வாய்ப்பிருப்பதால், பவானி ஆற்றின் கரையோர வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் இன்று இரவுக்குள் இந்த அணை நிரம்பும் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
0
0