தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு 20% வரை குறைவு… இதுவரை 177 நிறுவனங்கள் மூடல் : அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்..!!
Author: Babu Lakshmanan2 July 2022, 12:45 pm
தஞ்சை : மஞ்சப்பைத் திட்டத்தால் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தில் 34வது ஆண்டு விழா பல்கலைக்கழக வேந்தர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நேற்று நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர்கள், மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ. மெய்யநாதன் கலந்து கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தினமும் பல டன் காய்கறி கழிவுகள் கொட்டப்படுகின்றன. காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் மற்றும் இயற்கை உரம் தயாரிக்க 25 கோடி ரூபாய் நிதியை முதல்வர் ஒதுக்கியிருக்கிறார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் இம்மாதம் 28ம் தேதி உலகமே வியக்கும் வகையில் பிரம்மாண்டமாக துவங்க உள்ளது. அதற்க்காக 52 ஆயிரம் சதுர அடி பரப்பில் உலகத்தரத்தில் அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற உள்ள நிறைவு விழாவில் முதல்வர் பங்கேற்று பதக்கக்கங்கள், பரிசுகளை வழங்க உள்ளார்.
மேலும், தமிழகத்தில் இதுவரை 1,175 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு 177 கம்பெனிகள் மூடப்பட்டுள்ளது. 105 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மஞ்சப்பைத் திட்டம் உள்ளிட்ட விழிப்புணர்வால் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு 20% வரை குறைந்துள்ளது.
வெளி மாநிலங்களில் இருந்து பிளாஸ்டிக் வருவதால் செயல்பாட்டை குறைக்க முடியவில்லை. 1.7.22 முதல் இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ளது. 14 வகையான பிளாஸ்டிக்கு கடை விதிக்கப்பட்டு அதற்கான மாற்றுப் பொருட்களை அரசு அறிவித்துள்ளது. மக்கள் மனங்களில் ஏற்படும் மாற்றத்தை பொறுத்து முழு வெற்றி இருக்கும், என தெரிவித்தார்
0
0