12ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு செய்ததில் தப்பு மேல் தப்பு… ஆசிரியர்கள் தவறிழைத்தது அம்பலம்..!!!
Author: Babu Lakshmanan17 July 2022, 10:37 am
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ததில் ஆசிரியர்கள் தவறிழைத்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த மே 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை 12ம் பொதுத்தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களில் சந்தேகம் வருவதை தேர்வு செய்யும் விதமாக, மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலை பெறுவதற்கான அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது.
அந்த வகையில், தேர்வு முடிவுகள் வெளியான பின்பு தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் விடைத்தாள் நகலை பெற்று, தங்களுக்கான மதிப்பெண்களை சரிபார்த்தபோது, அதில் குளறுபடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது
வேதியியல், கணினி அறிவியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் பெற்ற உண்மையான மதிப்பெண்களை காட்டிலும், குறைவான மதிப்பெண்களை கணக்கிட்டு ஆசிரியர்கள் வழங்கியது தெரியவந்திருக்கிறது.
வேதியியல் பாடத்தில் 57 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு செய்முறை தேர்வு 30 மதிப்பெண்கள் என 87 மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவரின் விடைத்தாளை சோதித்தபோது, 67 மதிப்பெண்கள் மற்றும் செய்முறை தேர்வு மதிப்பெண் 30-ஐ கூட்டினால் அம்மாணவர் 97 மதிப்பெண்களை வேதியியல் பாடத்தில் பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல், இயற்பியல் பாடத்தில் மாணவர் ஒருவர் 72 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் விடைத்தாள் நகலைப் பெற்று சரிபார்த்ததில், அம்மாணவர் 82 மதிப்பெண்களை பெற்றுள்ளதும் தெரியவந்திருக்கிறது. மேலும் கணினி அறிவியல் பாடத்தில் 85 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் விடைத்தாள் நகலைப் பெற்று மதிப்பெண்களை சரிபார்த்ததில் அவர் 95 மதிப்பெண்கள் பெற்றுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்திய பிறகு சரியாக திருத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளனவா என்பதைப் பரிசோதிக்க முதல்நிலை மதிப்பீட்டாளர், இரண்டாம் நிலை மதிப்பீட்டாளர், முதன்மை மதிப்பீட்டாளர் என்று ஆசிரியர்கள் தேர்வுத் துறையால் பணியமர்த்தப்பட்ட நிலையில், அவர்கள் யாரும் மாணவர்களுக்கான மதிப்பெண்கள் சரியாக கணக்கிடப்பட்டதா என்பதை சரிபார்க்கத் தவறியது இதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் விடைத்தாள்களைத் திருத்திய ஆசிரியர்கள் அதன்பின்னர் பரிசோதித்த விடைத்தாள் கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்கள் நடைபெற்றுள்ள தவறை உணராமல் தவறான மதிப்பெண்களை வழங்கியுள்ளதை மாணவர்கள் கண்டறிந்து சமூகவலைதளங்களில் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.