+2 பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்… தாய் திட்டியதால் மாணவி விபரீத முடிவு.. தாயும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி!!

Author: Babu Lakshmanan
22 June 2022, 10:50 am

திருச்சி அருகே ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றதாக தாய் திட்டியதால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தாய் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள கலிங்கமுடையான்பட்டி சேர்ந்தவர் மூக்கன் – அனுராதா தம்பதியினர். இருவரும் கூலி வேலை செய்கின்றனர். இவர்களுடைய மகள் அனுசுயா துறையூரில் உள்ள தனியார் அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பும், மகன் அபிஷேக் சேனப்பநல்லூரில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்தனர்.

நேற்று முன்தினம் காலை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அனுசுயா 600க்கு 383 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மகளின் மதிப்பெண்ணை அறிந்த தாய் அனுராதா மதிப்பெண் குறைவாக இருப்பதாகக் கூறி திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அனுசுயா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் இறந்த துக்கம் தாளாமல் அவருடைய தாய் அனுராதாவும் வீட்டிலிருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து விட்டு உயிருக்கு போராடினார். அருகிலிருந்தவர்கள் அனுராதாவை துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

தகவலறிந்து துறையூர் போலீஸார் அனுசுயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்