சாதி சான்றிதழ் கிடைக்காத விரக்தி… எலி பேஸ்ட் சாப்பிட்டு மாணவி தற்கொலை ; தி.மலையில் சோகம்..!!
Author: Babu Lakshmanan23 June 2023, 4:46 pm
திருவண்ணாமலை அருகே சாதி சான்றிதழ் கிடைக்காததால் மனம் உடைந்த மாணவி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (லேட்). அவரது மகள் ராஜேஸ்வரி (17), திருவண்ணாமலையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார். நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் இவர் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டு கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பித்திருந்தார்.
இவர்கள் பன்னியாண்டி என்கின்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அந்த இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு எஸ்சி சான்றிதழ் பெற வேண்டும் என்றும் இந்த மாணவி முயற்சி செய்துள்ளார்.
ஆனால், அரசு தரப்பில் இந்த மாணவிக்கு அந்த சான்றிதழ் தர இயலாது என்று தெரிவித்துள்ளதாக தெரிகிறது. தன்னோடு பயின்ற மாணவிகள் எல்லாம் கல்லூரியில் சேர்ந்து விட்ட நிலையில், தான் கல்லூரியில் சேர முடியவில்லை என வருத்தத்தில் அந்த மாணவி, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு எலி பேஸ்ட் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவியின் உயிரை காப்பாற்ற வேண்டும்.
மாணவிக்கு பண்ணியாண்டி சமூகம் எஸ் சி சான்றிதழ் வரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எந்த பரிசீலனையும் செய்யவில்லை. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி ராஜேஸ்வரி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.