அறுவை சிகிச்சை முடிந்து நேராக வந்து தேர்வு எழுதிய மாணவி… ஆம்புலன்ஸிலேயே தேர்வு மையத்திற்கு வந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
5 May 2022, 2:51 pm

திருப்பூர் : ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்புக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு, மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் மாணவி தேர்வு எழுத வந்த நிகழ்வு அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றது.

திருப்பூர் குப்பாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி கீதா. இவர்களது மகள் ரிதன்யா. இவர் திருப்பூர் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஞாயிறன்று ரிதன்யாவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.

இதை அடுத்து திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், அது தொடர்பான நுண் துளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சையானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டு மாணவி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே இன்று பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெறும் சூழலில், மருத்துவமனையில் இருந்த ரிதன்யா தானும் தேர்வு எழுத வேண்டும் என பெற்றோரிடமும், மருத்துவரிடமும் தெரிவித்துள்ளார்.

மாணவியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, மருத்துவர் அறிவுரையின் பேரில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று செவிலியர்கள் உதவியுடன் தேர்வினை எழுதியுள்ளார்.

மருத்துவப் படுக்கையில் இருந்த போதும் கல்வி மீதான மாணவியின் அர்ப்பணிப்பை விளக்கும் இந்த நிகழ்வு அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றுள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்