‘முதல் தவணை பணத்தை விடுவிக்க முடியாது’… மிரட்டும் பஞ்சாயத்து தலைவர்… பிரதமரின் வீடுகட்டும் திட்டப் பயனாளி தற்கொலை செய்ய முடிவு…!
Author: Babu Lakshmanan15 December 2023, 5:02 pm
நீடாமங்கலம் அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகட்டி வரும் பயனாளிக்கு முதல் தவணை பணத்தை விடுவிக்க முடியாது என பஞ்சாயத்து தலைவர் மற்றும் அதிகாரிகள் மிரட்டுவதால், பயனாளி தற்கொலை செய்ய முடிவுக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் புள்ளவராயன் குடிகாடு, இக்கிராமத்தை சேர்ந்த சந்திரா என்பவர் புள்ளவராயன்குடிகாடு பஞ்சாயத்தில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.
வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் இவர் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனு செய்துள்ளார். இவரது மனுவினை பரிசீலித்த அதிகாரிகள் இவரது இடத்தை ஆய்வு செய்து வீடுகட்ட அனுமதி வழங்கியுள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் தங்களது சொந்தப்பணத்தில் அடித்தளம் அமைத்து அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தபிறகு, அதற்கு உண்டான தவணை பணத்தை அதிகாரிகள் விடுவிப்பார்கள். அதனை அடுத்து லிண்டன் வரையிலான பகுதி, ரூஃப் மேல்தளம் கான்கீரிட் என பகுதி பகுதியாக முடிவடைந்த பணிகளை ஆய்வு செய்து, பின்னர் அதற்கு உண்டான பணத்தை அதிகாரிகளால் விடுவிக்கப்படவேண்டும் என்பது அரசின் விதிமுறைகள்.
இத்தகைய அரசின் விதிமுறையின்படி துப்புரவு தொழிலாளர் சந்திரா தனக்கு சொந்தமான இடத்தில் கந்துவட்டிக்கு கடன் வாங்கி அடித்தளம் அமைத்துள்ளார். பின்னர், இதற்கு உண்டான ஆதாரங்களை நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பித்து பணத்தை விடுவிக்க கோரி மனு செய்துள்ளார்.
ஆனால் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் உள்ளிட்ட துறை அதிகாரிகள், இதற்கு உண்டான பணத்தை விடுவிக்காமல் பயனாளி சந்திராவை அலைக்கழிப்பதாகவும், உறவினர் இடத்தில் அரை அடி தள்ளி வீடு கட்டுவதாக உணமைக்கு புறம்பாக கூறி வீட்டின் தவணைத்தொகையை வழங்க மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கனவே வீட்டின் அடித்தளம் அமைக்கும் பணிக்காக கந்துவட்டிக்கு கடன் வாங்கி அவதியுற்று வரும் பயனாளி சந்திரா, வீடு அமைப்பதற்கு தளம் போட்டு ஓர் ஆண்டுகள் முடிவடையும் நிலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலக பொறியாளர் மற்றும் அமமுக ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் பல்வேறு காரணங்களை கட்டி முதல் தவணை பணத்தை விடுவிக்காமல், பிரதமர் வீடு வழங்கிய லிஸ்டில் இருந்து உனது பெயரை கேன்சல் செய்திடுவதாகவும் மிரட்டுவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இதுகுறித்து உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தனக்கு சேரவேண்டிய வீட்டின் அடித்தளத்திற்கான முதல் தவணை தொகையை விடுவிக்க முன்வராவிடில் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என சந்திரா மனவேதனை தெரிவித்துள்ளார்.