பிரதமர் மோடி வருகை.. மதுரை, திருச்சியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்… ராமேஸ்வர மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!!
Author: Babu Lakshmanan18 January 2024, 7:43 pm
பாரதப் பிரதமர் வருகை மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையப் பகுதியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அயோத்தியில் இருக்கக்கூடிய ராமர் கோவிலுக்காக ராமேஸ்வரம் பகுதியில் சுவாமி தரிசனத்திற்கு பிறகு அங்கிருந்து புனித நீரை எடுத்துச் செல்வதற்காக வரும் இருபதாம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பாரதப் பிரதமர் அவர்கள் மதுரை வருகை தந்து அதன் பிறகு மதுரை விமான நிலையத்திலிருந்து ராமேஸ்வரம் செல்ல உள்ளார்.
இந்த நிலையில் பாரத பிரதமர் அவர்களின் வருகை மற்றும் குடியரசுஎன்ன விழாவை முன்னிட்டு மதுரையின் அனைத்து பகுதிகளிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் ஒன்று கூடும் பகுதிகளான எம்ஜிஆர் பேருந்து நிலைய வளாகம் முழுவதும் வெடிகுண்டு தடுப்பு பிரிவுகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மாட்டுத்தாவணி பேருந்து நுழைவாயில் பகுதியில் இருக்கக்கூடிய பூக்கடை, பழக்கடை பேருந்து வளாகத்தில் இருக்கக்கூடிய குப்பைத்தொட்டிகள் மட்டுமல்லாது, ஏடிஎம் மற்றும் பேருந்து செல்வதற்காக காத்திருக்கக்கூடிய பயணிகளின் உடைமை உள்ளிட்டவைகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
வெடிமருந்து கண்டறியும் கருவி உள்ளிட்ட கருவிகளைக் கொண்டு வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று, மதுரையிலிருந்து பிற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளிலும் ஏறி பேருந்து பயணிகள் வைத்திருக்கக்கூடிய உடமைகள் மற்றும் பேருந்து நடைமேடைகளில் இருக்கக்கூடிய கடைகளில் இருக்கக்கூடிய பொருட்கள் உள்ளிட்டவைகளிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.
இதேபோல, ராமர் கோவில் கும்பாபிஷே விழா நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்நிலையில் 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வருகிற 20ஆம் தேதி சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
இதனைத் தொடர்ந்து அயோத்தி ராமர் கோவில் விழாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். 20ஆம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி பிரதமர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே ஹெலிகாப்டரில் இறங்கி அங்கிருந்து சாலை மார்க்கமாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்த பின்பு மீண்டும் சாலை மார்க்கமாக புறப்பட்டு ஹெலிபேட் உள்ள இடத்திற்கு வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்.
இந்த நிலையில் பிரதமரின் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான ஹெலிகாப்டர் இறங்குதளம் எனப்படும் ஹெலிபேட் அமைக்கும் பணி யாத்திரி நிவாஸ் எதிரே துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த இடத்தை தூய்மைப்படுத்தும் பணியை திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ள நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து புண்ணிய தீர்த்தங்களை எடுத்து செல்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 20 மற்றும் 21 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராமேஸ்வரம் வருகை தர உள்ளார்.
பிரதமர் வருகையை ஒட்டி ராமேஸ்வரம் தீவு பகுதியில் ஜனவரி 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தற்போது அண்மை செய்தியாக தகவல் தெரிவித்துள்ளனர்.
0
0