அறிவிச்சு 3 மாதங்களாயிடுச்சு.. பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம் குறைக்கப்படாதது ஏன்? அன்புமணி ராமதாஸ் கேள்வி
Author: Babu Lakshmanan18 January 2024, 7:51 pm
பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம் 3 மாதங்களாகியும் குறைக்கப்படாதது ஏன்? என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் 10 வீடுகளுக்கும், 3 மாடிகளுக்கும் குறைவாக உள்ள, மின்தூக்கி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம் ஓர் அலகுக்கு 8.15ரூபாயில் இருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த அக்டோபர் 18-ந் தேதி அறிவித்து 3 மாதங்களாகிவிட்ட நிலையில், இன்று வரை அக்கட்டணக் குறைப்பு நடைமுறைப் படுத்தப்படவில்லை.
பல அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கடந்த இரு மாத சுழற்சிக்கான மின்கட்டணம், பொதுப்பயன்பாட்டுக்கான மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு ரூ.8.15 என்ற அளவில் தான் கணக்கிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மின்கட்டணக் குறைப்பை செயல்படுத்தாமல் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன் வீடுகளுக்கான மின்கட்டணம் தான், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப்பயன்பாட்டு இணைப்புகளுக்கும் வசூலிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, மாதத்திற்கு 100 அலகுகள் மின்சாரம் இலவசமாக வழங்கப் பட்டது. ஆனால், பொதுப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை, வணிகப் பயன்பாட்டுக்கான கட்டணத்தை விட அதிகமாக சுமார் 10 மடங்கு அளவுக்கு உயர்த்திய தமிழ்நாடு அரசு, இலவச மின்சாரத்தையும் ரத்து செய்துவிட்டது.
எனவே, அறிவிக்கப்பட்ட அளவில் இல்லாமல், அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை ஏற்கனவே இருந்த அளவுக்கு குறைக்க வேண்டும். முன்பு வழங்கப்பட்டதைப்போல பொதுப்பயன் பாட்டுக்கும் 100 அலகு மின்சாரம் இலவசமாக வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.