அரசாணை 149 அறிவிப்பு வாக்குறுதி என்ன ஆச்சு? பட்டதாரி ஆசிரியர்கள் ஏமாற்றம் ; திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி..!!

Author: Babu Lakshmanan
25 October 2023, 6:13 pm

ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி அரசாணை 149 மற்றும் அதன்படியாக போட்டித் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் நியமிப்பதற்காக 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வள பயிற்றுனர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த நடவடிக்கை பட்டதாரி ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரிகளுக்கு இருவகையில் ஏமாற்றம் அளித்திருக்கிறது.

முதலாவதாக, அரசு பள்ளிகளில் 3,587 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிக்கை ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, ஜூன் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த திசம்பர் மாதமே ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதன்பின் 7 மாதங்கள் தாமதமாக அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், நிரப்பப்படவுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை 2,222 ஆக குறைந்து விட்டது.

அறிவிக்கை வெளியிட 7 மாதங்கள் தாமதமாகியுள்ள நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, காலியிடங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது வியப்பளிக்கிறது. அனைத்து காலியிடங்களையும் நிரப்பி அரசு பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும், அக்கறையும் அரசுக்கு இல்லை என்பதையே இது காட்டுகிறது.

இரண்டாவதாக, 2018-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 149-இன்படி, பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் போட்டித் தேர்வின் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. அரசாணை எண் 149, அதனடிபடையிலான போட்டித் தேர்வு ஆகிய இரண்டும் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது கடந்த ஆட்சியில் திணிக்கப்பட்ட போட்டித் தேர்வை நடத்த துணிந்திருப்பதன் மூலம், தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு பெரும் துரோகம் செய்திருக்கிறது.

2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அதன் தரவரிசை அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. அப்போது போட்டித் தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை. ஆனால், 2018ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட 149 என்ற எண் கொண்ட அரசாணை மூலம் போட்டித் தேர்வை அப்போதைய அரசு திணித்தது. அதற்கு பா.ம.க.வுடன் இணைந்து எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் போட்டித் தேர்வை ரத்து செய்வோம் என்று சூளுரைத்திருந்தார். திமுகவின் தேர்தல் அறிக்கையிலும், இது குறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதை செயல்படுத்த வலியுறுத்தி, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், போட்டித் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று அரசு அறிவித்திருக்கிறது.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை ஒட்டுமொத்த தமிழகமும் என்னென்ன காரணங்களுக்காக எதிர்க்கிறதோ, அந்தக் காரணங்கள் அனைத்தும் போட்டித் தேர்வுக்கு எதிராகவும் உள்ளன. ஒரு படிப்புக்கு 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு, நீட் தேர்வு என இரு தேர்வுகள் தேவையில்லை என்பது தான் நீட் தேர்வை எதிர்ப்பதற்காக தமிழக அரசு கூறும் காரணமாகும். அப்படியானால், ஒரே பணிக்கு தகுதித் தேர்வு, போட்டித் தேர்வு என இரு தேர்வுகளை நடத்துவது மட்டும் எப்படி சரியாக இருகும்? எனவே, ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி அரசாணை 149 மற்றும் அதன்படியாக போட்டித் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு ஆணையிட வேண்டும்!, என தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 323

    0

    0