Am I Next? போஸ்டர் ஒட்டிய பாமக.. அனுமதி மறுத்த காவல்துறை!
Author: Hariharasudhan2 January 2025, 9:51 am
’அடுத்தது நானா?’ என்ற கேள்வியுடன் பாமக போஸ்டர் ஒட்டியுள்ள நிலையில், இன்றைய பாமகவின் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
சென்னை: சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, ‘அடுத்தது நானா? Am I Next?’ என்ற வாசகத்துடன் பாமக சார்பில் சென்னையில் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது, கவனம் பெற்று உள்ளது. முன்னதாக, ‘யார் அந்த SIR?’ என்ற வாசகத்துடன் அதிமுக போஸ்டர் அரசியலைக் கையிலெடுத்தது.
இந்த நிலையில், பாமகவும் Am I Next? என்ற கேள்வி உடன் போஸ்டரை ஒட்டி, அரசியல் கவனம் பெற்றிருக்கிறது. இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, பாமக மகளிர் சங்கம் சார்பில் சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டு உள்ளது.
ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இருப்பினும், இப்போராட்டத்தை, பசுமை தாயகம் தலைவர் செளமியா அன்புமணி தலைமையில் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, வள்ளுவர் கோட்டம் அருகே காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக, கடந்த டிசம்பர் 23ஆம் தேதி, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக, சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின்படி, SIR என ஒருவரைக் குறிப்பிட்டு ஞானசேகரன் பேசியதாக தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: என் உயிர் இருக்கும் வரை… அண்ணாமலை குறித்து வைகோ பகீர்!!
எனவே, இந்த சார் யார் என்பதை கேள்வி எழுப்பி, அதிமுக போஸ்டர் ஒட்டியிருந்தது. அதேநேரம், கள்ளக்குறிச்சியில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக ஒரு வாரமாகியும் விசாரணையில் தாமதம் ஏற்படுத்துவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து இருந்தார். எனவே, தொடர் பாலியல் அத்துமீறல் சம்பவங்களை தொடர்புபடுத்தி, ‘அடுத்தது நானா?’ என்ற போஸ்டரை பாமக ஒட்டியுள்ளது.