தமிழகத்தின் மரபுகளை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டுமா? பாமக முதல் விசிக வரை கூறுவது என்ன?
Author: Hariharasudhan6 January 2025, 1:47 pm
தமிழ்நாட்டின் மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: புத்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர், இன்று ஆளுநர் உரையுடன் தொடங்க இருந்தது. ஆனால், தேசிய கீதம் பாட மறுத்ததாகக் கூறி, ஆளுநர் ஆர்.என்.ரவி அவைக்கு வந்த 3 நிமிடங்களில் வெளியேறினார். இது மீண்டும் திமுக – ஆளுநர் மோதலைக் குறிவைக்கும் நிலையில், இது குறித்து ஆளும் அரசு, பாஜக கூட்டணியில் உள்ள பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கூறுவது பற்றி காணலாம்.
இது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறுகையில், “உரையாற்ற வரும் ஆளுநருக்கு பேரவையில் கருத்து சொல்ல அனுமதி இல்லை. ஆளுநர் உரையாற்றும் நாள், சட்டப்பேரவை நடந்த நாளில் கூட கணக்கில் வராது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் கொடுத்த உரையை ஆளுநர் வாசிப்பது சம்பிரதாயம்.
ஆளுநர் சொல்வதற்காக சட்டப்பேரவை மரபுகளை மாற்ற முடியாது. 1920-இல் சென்னை மாகாண சட்டமன்றம் கூடியது முதல் இருக்கும் மரபே, தற்போதும் பின்பற்றப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில்கூட தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்ற பிரச்னை இல்லை” எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன், “தமிழ்நாட்டின் மரபுகளை மாற்ற வேண்டும் என ஆளுநர் கூறுவது ஏற்புடையது அல்ல. ஆளுநர் வேண்டுமென்றே நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஷங்கருக்கு வந்த புது சிக்கல்.. Game Changer-க்கு தமிழ்நாட்டில் சோதனை!
அதேநேரம், பாஜக உடன் கூட்டணியில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘தமிழ்நாட்டின் மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் ஆளுனர் புரிந்து கொள்ள வேண்டும். ஆளுனருக்கு உரிய மரியாதை அரசு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு,
பெண்களுக்கு பாதுகாப்பு, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள், உழவர்களின் எண்ணிக்கையிலடங்காத கோரிக்கைகள், பட்டியலின மக்களின் தேவைகள் என விவாதிக்கப்படுவதற்கும், செயல்படுத்தப்படுவதற்கும் ஏராளமான விவகாரங்கள் உள்ளன. அவற்றை விடுத்து, கவனத்தை திசைதிருப்பும் வகையிலான எந்த செயலையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவை தவிர்த்திருக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.