‘கல்வியின் குறியீடாக பார்க்கிறேன்’.. பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு தங்கப்பேனாவை பரிசளித்த கவிஞர் வைரமுத்து..!!

Author: Babu Lakshmanan
11 May 2023, 12:53 pm

வெற்றி பெற்ற மாணவிக்கு தங்கப் பேனாவை வழங்கிய கவிஞர் வைரமுத்து தற்போது தோல்வியுற்ற மாணவர்கள் மறு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்படும் என்று கூறினார்.

தமிழகத்தில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழக வரலாற்றுச் சாதனையாக திண்டுக்கல் மாணவி நந்தினி அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று 600 க்கு 600 தமிழகத்தின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.
மாணவியை பாராட்டும் விதமாக கவிஞர் வைரமுத்து மாணவியின் வீட்டிற்கு நேரில் வந்து மாணவியை பாராட்டி தங்க பேனா வழங்கினார். தொடர்ந்து, மாணவியின் தந்தை மற்றும் தாயாருக்கும் வாழ்த்து கூறினார்.

மேலும், செய்தியாளர்களை சந்தித்த கவிஞர் வைரமுத்து கூறியதாவது:- ஒரு ஏழையின் வீடு எளிய வீடு. அந்த வீட்டிற்கு இன்று அதிகார மையங்கள் எல்லாம் முற்றுகை இடுகின்றன. திண்டுக்கல் நகரத்தை நோக்கி எல்லா சாலைகளும் நிரம்பி வழிகின்றன.
எளிய குடும்பத்துப் பெண் தமிழ்நாடு அளவிலே அறியப்பட்டு உலகம் எல்லாம் யார் அந்த நந்தினி என்று கேள்வியை எழுப்பப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் காரணம் என்ன தெரியுமா..? கல்வி கல்வியின் வெற்றி. கல்வி என்பது மாடத்தின் உச்சத்தில் அல்ல. மாளிகையின் உச்சத்தில் அல்ல. ஏழையின் குடிசையில் கல்வியின் தீபம் உச்சத்தை நோக்கி எரியும் என்பதற்கு நந்தினி ஓர் உதாரணம். ஒரு அதிசயமாக பார்க்கிறேன். நந்தினியை தனிமனித பெண்ணாக பார்க்கவில்லை. கல்வியின் குறியீடாக பார்க்கிறேன். நந்தினி பெற்றிருக்கும் மதிப்பெண் வரலாற்றில் யாரும் தொடாத இலக்கு.

ஆறு பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று கற்பனை செய்து பார்க்க முடியாத செயல். ஆறு தாள்களும் வெவ்வேறு ஆசிரியர்கள் மூலம் பயின்று , ஆறு தாள்களில் 100 மதிப்பெண் வாங்கி வெற்றி பெற்றுள்ளார். ஆறு தாள்களும் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு ஆசிரியர்கள் மூலம் திருத்திப்பட்டு மதிப்பெண் வழங்கப்பட்டு அதில் வெற்றி பெற்றுள்ளார். கல்வி உலகம் நந்தினியை கொண்டாட வேண்டும். பெண் குலத்தை கொண்டாடுகிறேன், ஆசிரியர்களே கொண்டாடுகிறேன், மாணவியை கொண்டாடுகிறேன்.

அதே நேரத்தில் மிக மிக முக்கியம் கல்விக்கும், செல்வத்திற்கும் சம்பந்தமில்லை. ஏழ்மை நிலையிலும் கல்வி பெருகிவரும் என்பதற்கு நந்தினி ஒரு எடுத்துக்காட்டு. நந்தினிக்கு நாங்கள் நன்றி சொல்ல விரும்புகிறேன். இன்று நந்தினிக்கு வழங்கிய தங்கப்பேனா என்பது நந்தினிக்கு மட்டும் வழங்கியது அல்ல. வெற்றி பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் வழங்கப்பட்ட பேனா.

எல்லா பெண்களும் எல்லா மாணவர்களும் வாழ்க்கையில் லட்சியத்தை வைத்துக் கொண்டு லட்சியத்தை நோக்கி செல்ல வேண்டும். நந்தினி தொட்ட சிகரத்தை தொட முடியும். தேர்வு என்று வந்தவுடன் ஒரு உலகம் வெற்றி பெற்ற உலகம், தேர்ச்சி பெறாத உலகம், தேர்ச்சி பெற்ற உலகத்தையே நாம் கொண்டாடி வருகிறோம். தேர்ச்சி பெறாத உலகத்தை நாம் மறந்து விடுகிறோம். தேர்ச்சி பெறாத உலகத்தை கண்காணிக்க வேண்டும்.

தோற்றுப்போன மாணவர்களை தத்தெடுத்து கல்வி ஊட்டி அவர்களையும் வெற்றி பட்டியலில் சேர்ப்பதற்கு நாம் அனைவரும் முன்னெடுக்க வேண்டும். மாணவர் உலகம் சமத்துவப்படும். ஆசிரியர் பெருமக்கள் தோற்றுப் போனவர்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஊக்கப்படுத்த வேண்டும்.

தோற்றுப் போனவர்கள் மீண்டும் தேர்வு எழுதி யார் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ, அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு எப்படி பரிசுகள் வழங்கப்பட்டதோ, அதேபோல் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்று, அதிக மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும், என்று கூறினார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 513

    0

    0