மெத்தபெட்டமைன் கடத்தல் வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் போலீசார்.. என்ன நடந்தது?
Author: Hariharasudhan3 December 2024, 7:15 pm
சென்னையில் மெத்தபெட்டமைன் விற்பனை தொடர்பாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை: சமீப காலமாக மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தல், விற்பனை, உற்பத்தி என குற்றங்கள் பெருகி வருவதை செய்திகளால் அறிய முடிகிறது. எனவே, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், சென்னை வடபழனியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, சுரேந்திரநாத் மற்றும் காவலர் ஜேம்ஸ் ஆகிய இருவரை கைது செய்தனர். இவ்வாறு போலீசாரே மெத்தபெட்டமைன் விற்பனையில் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘கிரைண்டர்’ என்ற செயலி மூலமாக மெத்தபெட்டமைன் போதைப் பொருளை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து காவலர் ஜேம்ஸிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் (NCB) பணிபுரியும் ஆனந்த் என்ற காவலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, இவர்களின் வங்கிக் கணக்கை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், சுமார் 35 லட்சம் ரூபாய் வரை பணப்பரிவர்த்தனை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், இந்த நபர் பல இடங்களுக்கு மெத்தபெட்டமைன் போதைப் பொருளை விற்பனை செய்ததும் விசாரணையின் முடிவில் தெரிய வந்தது. அதுமட்டுமல்லாது, இதில் சமீர் என்ற காவலரும் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, காவலர்கள் மூலம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் எவ்வாறு விற்பனை செய்யப்படுகிறது, எங்கு இருந்து இந்த போதைப் பொருள் இவர்களுக்கு கையில் கிடைக்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: டிச.13-க்கு காத்திருக்கிறேன்.. களத்திற்கு வராத விஜய்? – அண்ணாமலை சஸ்பென்ஸ் பதில்கள்!
மேலும், இந்த குற்றச் சம்பவத்தில் வேறு ஏதும் முக்கியப் புள்ளிகள் தொடர்பில் உள்ளனரா என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.