தீபாவளி போனஸ் கேட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது.. கோவை மாநகராட்சியில் நடப்பது என்ன?

Author: Hariharasudhan
18 October 2024, 1:17 pm

தீபாவளி போனஸ் கேட்டு மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட கோவை மாநகராட்சியின் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இவர்கள் தங்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.2,000 அல்லது ரூ.2,500 வரை மட்டுமே வழங்கப்படுவதாகவும், ஆனால் தங்களுக்கு ஒரு மாத ஊதியத்தை போனஸாக தர வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து, காத்திருப்பு போராட்டத்தையும் கடந்த இரண்டு நாட்களாக நடத்தி வந்தனர்.

இதன் அடிப்படையில், அதிகார குரல் கூட்டமைப்பு சார்பில் இந்த காத்திருப்பு போராட்டமானது நடைபெற்று வந்தது. மேலும், இது குறித்து கோவை மாநகராட்சி துணை ஆணையாளரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அதில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை. இதனால் போராட்டம் தொடருமென்று தூய்மைப் பணியாளர்கள் அறிவித்தனர். இதனால், இன்றும் (அக்.18) மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இதற்காக மாநகராட்சி அலுவலகத்திற்கு 80க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வந்திருந்தனர். ஆனால், காவல்துறையினர் அனுமதி மறுத்ததுடன், தற்காலிக இரும்பு கேட்டைக் கொண்டு அலுவலக நுழைவாயிலை மறைத்துள்ளனர். இதனால் போராட்ட நடத்த வந்த தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகம் முன்பே கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க : ரஜினிக்கு என்ன ஆச்சு…? அவசர அவசரமா இணைந்து வாழ முடிவெடுக்கும் ஐஸ்வர்யா – தனுஷ்!

அது மட்டுமல்லாமல், தங்களை மாநகராட்சி அலுவலகத்திற்குள் அனுமதித்தால் அமைதியான வழியில் காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் எனக் கூறிய போதிலும், காவல் துறையினர் அனுமதி மறுத்ததை தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகம் முன்பே திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இதனால் காவல்துறையினர் அவர்களை கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனால் மாநகராட்சி அலுவலகம் முன்பு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பரபரப்பான சூழல் நிலவியது.

  • malavika mohanan shared the bad experience when she was 19 year old in mumbai local train ஓடும் ரயிலில் நடந்த கொடூரம்! பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாளவிகா மோகனன்? அடக்கடவுளே!