பெண்களை சரமாரியாக லத்தியால் தாக்கிய போலீசார்..கோவில் திருவிழாவில் கல்வீச்சு: கோஷ்டி மோதலில் போலீஸ் வாகனம் உடைப்பு…!!(வீடியோ)
Author: Rajesh5 April 2022, 8:19 pm
திருச்சி: தொட்டியம் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் விசாரணைக்கு அழைத்து சென்றோரை விடுவிக்க கோரி மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை லத்தியால் அடித்தும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் கூட்டத்தை கலைத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டு கோயில் திருவிழா கடந்த மாதம் 15ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் துவங்கியது. இதைதொடர்ந்து கடந்த 30ம் தேதி தேரோட்டம் துவங்கி தினம்தோறும் நடந்து வருகிறது.
40 அடி உயரமுள்ள 2 தேர்களை பக்தர்கள் தோளிலும், தலையிலும் சுமந்து முக்கிய வீதிகளில் உலா வந்தனர். தேரில் மதுரை காளியம்மன், ஓலை பிடாரி அம்மன் அருள்பாலித்தனர். இந்த கோயில் திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணிக்காக 800க்கு மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று 5வது நாளாக தேர் திருவிழா நடந்தது. அப்போது ஒரு தரப்பினர் பூத்தட்டுகளை எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்தனர். அப்போது மர்மநபர்கள் கற்களை வீசி தாக்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கல்வீச்சில் 2 போலீஸ் ஜீப் கண்ணாடி மற்றும் 2 தனியார் வாகன கண்ணாடி உடைந்தது. சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டிருந்த போலீசார், அங்கிருந்த கூட்டத்தை கலைத்தனர். இதைதொடர்ந்து கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி சில வாலிபர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனராம். மேலும் தோளூர்பட்டி ஊராட்சி மன்ற துணை தலைவர் சரஸ்வதி சாமிநாதன் என்பவரை தகராறின்போது போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.
எனவே போலீசார் அழைத்து சென்றவர்களை உடனே விடுவிக்க கோரியும், ஊராட்சி மன்ற துணை தலைவரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டு வந்து திருச்சி – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை கார்த்திகைப்பட்டி என்ற இடத்தில் நேற்றிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஏடிஎஸ்பி பால்வண்ணநாதன், ஜீயபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், முசிறி டிஎஸ்பி அன்புமணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் விடிய விடிய சாலை மறியல் போராட்டம் நடந்தது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், திருச்சி எஸ்பி சுஜித்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. இதனால் வஜ்ரா வாகனத்திலிருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தும், லத்தியால் அடித்தும் பொதுமக்களை போலீசார் கலைத்தனர். இதனால் பரபரப்பு, பதற்றம் நீடித்தது. பெண்கள் என்றும் பாராமல் கொடூரமாக தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.