ஆட்சி மாறியதும் திமுகவின் தொண்டர் படையாக மாறிய காவல்துறை : முதலமைச்சர் ஸ்டாலினை பங்கம் செய்த சி.வி.சண்முகம்!!
Author: Udayachandran RadhaKrishnan28 February 2022, 2:05 pm
தமிழக காவல் துறையினர் திமுகவின் தொண்டர் படையாக மாறியுள்ளதாகவும், நீதிமன்றத்தை அஞ்சுறுத்தி கொண்டிருக்கும் வகையில் திமுக அரசு செயல்பட்டு கொண்டிருப்பதாக விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் விமர்சனம் செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதையும், அதிமுகவினர் மீது திமுகவினர் பொய் வழக்கு போடுவதை கண்டித்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் அதிமுகவினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆட்சி பொறுப்பிற்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை செய்யாமல், தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும், விவசாயிகள், மக்களை மறந்து அதிமுகவை எப்படி அழிப்பது என்று 24 மணி நேரமும் சிந்தித்து கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
தமிழக முதல்வர் அதிமுகவை அழிக்க அவர் வகுத்த திட்டம் தான் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்தும், கைது செய்து அதிமுகவை அழித்துவிடலாம் என நினைப்பதாகவும், திமுக அரசு செய்கின்ற தவறுகளை சுட்டிகாட்டுகின்ற ஜெயக்குமாரை கைது செய்துள்ளதாக கூறினார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர் அதிமுகவினரை கைது செய்வதை பார்த்து அதிமுக என்றைக்கும் அஞ்சியது இல்லை, பலமுறை சிறைச்சாலையை பார்த்தவர்கள் தான் அதிமுகவினர் எனவும் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விரட்டி அடிக்க வேண்டும் என தொடங்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக என கூறினார்.
திமுகவில் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பள்ளம் தோண்டி கொண்டிருப்பதாகவும் மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தை ஆளும் அப்போது திமுக இன்று செய்வதற்கு எதிர்வினையை அனுபவிப்பார்கள் என்றும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துறை திமுகவின் தொண்டர் படையாக மாறியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தேர்தலில் எதையும் கண்டுகொள்ளவில்லை திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டினார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திண்டிவனத்தில் வார்டு உறுப்பினர் ஒருவர் ஓட்டுக்கு 10 ஆயிரம் வரை திமுகவினர் கொடுத்துள்ளதாகவும், திமுகவின் வன்முறைக்கு பயந்து சென்னையில் 50 சதவிகித மக்கள் வாக்களிக்க செல்லவில்லை எனவும் 5 மணி முதல் 6மணி வரை கொரனோவால் பாதிக்கப்பட்டபர்கள் வாக்களிக்க ஒதுக்கப்பட்ட நேரத்தில் திமுகவின் தொண்டர் படை கள்ள ஓட்டு போட்டதை தடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.
நீதிமன்றத்தை அஞ்சுறுத்தி கொண்டிருக்கும் வகையில் திமுக அரசு செயல்பட்டு கொண்டிருப்பதாகவும், அமைச்சர் பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கில் ஆஜராகிய போது விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், திமுக அமைச்சரவையில் உள்ள 13 அமைச்சர்கள் பல்வேறு சொத்துக்களை கொள்ளையடித்துள்ளதாகவும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய செந்தில்பாலாஜியின் வழக்கில் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டால் வழக்கினை முடித்துவிடலாம் என நீதிமன்றம் கூறுவத திமுக ஆட்சியில் நிகழ்வதாகவும் விசித்தரமான வழக்குகளை நீதிமன்றம் சந்தித்து கொண்டிருப்பதாக கூறினார்.
திமுக அரசு பொய் வழக்குகளை அதிமுகவினர் மீது போட்டு வருவதாகவும், அடுத்தது சிவி சண்முகம் கைது செய்யப்பட உள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர். அப்படி கைது செய்ய வேண்டும் என்றால் தாராளாமாக என்னை கைது செய்ய வாருங்கள் தயாராக இருப்பதாகவும்,இலவு காத்த கிளி போன்று இருந்தவர் தான் ஸ்டாலின்.
கருணாநிதி முடியாத காலத்திலும் முதலமைச்சர் பதவியை ஸ்டாலினுக்கு வழங்வில்லை என்றும் கருணாநிதி சுய நினைவு இழந்தபோது தன்னை செயல்தலைவராக அறிவித்து கொண்டவர் தான் ஸ்டாலின் என சிவி சண்முகம் தெரிவித்தார்.
அதிமுகவை அழிப்பதற்காக பணத்தையும், நேரத்தையும் செலவழிக்காமல் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதை தமிழக முதல்வர் சிந்திக்க வேண்டும் எனவும் திமுகவில் சமூக நீதி இல்லை கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின் அவருக்கு பிறகு உதயநிதி இதில் எங்கே சமூக நீதி உள்ளது எனவும் திமுகவை தூக்கி எறியும் காலம் விரைவில் வரும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
0
0