இதயே இப்போதான் நீ செய்றியா? மருத்துவமனைகளில் அடுத்தடுத்த கட்டுப்பாடுகள்!

Author: Hariharasudhan
14 November 2024, 1:17 pm
Quick Share

மருத்துவர் மீதான தாக்குதலுக்குப் பிறகு, மருத்துவமனைகளில் டேக் கட்டாயம், போலீஸ் பூத் ஆகியவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில், நேற்று (நவ.13) விக்னேஸ்வரன் என்ற இளைஞர், அங்கு புற்றுநோய் பிரிவில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திவிட்டுச் சென்றார். பின்னர், அங்கிருந்த காவலாளிகள் மற்றும் பொதுமக்கள் அந்த இளைஞரைப் பிடித்தனர்.

மேலும், கத்தியால் குத்துபட்ட மருத்துவர் பாலாஜி, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவரையும் பார்த்தார். தற்போது மருத்துவர் நலமுடன் உள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க, சட்டம் ஒழுங்கு திமுக அரசில் எந்த அளவு சீரழிந்துவிட்டது என்பதற்கு இதுவே சாட்சி என அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினரும், தவெக தலைவர் விஜயும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து இருந்தார். இதனிடையே, சென்னை காவல் ஆணையர் அருண், மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டார்.

இந்த நிலையில், அனைத்து மருத்துவமனைகளிலும் போலீஸ் பூத் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, சம்பவம் நடந்த கிண்டி கருணாநிதி அரசு பல்நோக்கு மருத்துவமனையிலும் போலீஸ் பூத் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

DOCTR BOOTHS

மேலும், நோயாளிகள் மட்டுமல்லாது, நோயாளிகள் உடன் வருபவர்களுக்கு 4 விதமான டேக்குகள் கையில் கட்டப்படும் என மருத்துவத் துறை தெரிவித்து உள்ளது. இதன்படி, சிவப்பு – தீவிர சிகிச்சைப் பிரிவு, நீலம் – பொது மருத்துவம், மஞ்சள் – சிறப்பு மருத்துவ சிகிச்சைப் பிரிவு மற்றும் பச்சை – சிறப்பு அறுவை சிகிச்சைப் பிரிவு ஆகியவை கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: நாங்கள் மட்டும் என்ன? மருத்துவர் கத்திக்குத்து விவகாரத்தின் மறுபக்கம்!

இந்த டேக் அறிவிப்பால், இந்த திட்டத்திற்கே இப்போதுதான் அரசு மருத்துவமனைகள் வருகிறதா என்ற கேள்வியை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் முன் வைத்துள்ளனர். ஏனென்றால், இவை அனைத்தும் தனியார் மருத்துவமனைகளில் புழக்கத்தில் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நேற்றைய தினமே, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மனநல மருத்துவர் ஹரிஹரனை, அவரிடம் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் தாக்கிவிட்டுச் சென்றதாக, அந்த மருத்துவமனையின் முதல்வர் வண்ணார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 50

    0

    0

    Leave a Reply