நள்ளிரவில் சினிமாவை மிஞ்சிய சேசிங்… வனப்பகுதிக்குள் சிக்கிய கார்..!!
Author: Udayachandran RadhaKrishnan25 December 2024, 2:13 pm
திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து திண்டுக்கல் -நத்தம் சாலையில் செல்லும் ஒரு பச்சை நிற குவாலீஸ் காரை மறித்து பிடிக்க சொல்லி சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து அந்த காரை சாணார்பட்டி காவல் நிலைய முன்பாக பேரிக்கார்டுகள் அமைத்து தடுக்க முயன்ற சசி என்ற காவலர் மீது மோதிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.
உடனடியாக கோபால்பட்டியில் இரவு பணியில் இருந்த போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கே அந்த காரை மறித்து நிறுத்த கோபால்பட்டில் பஸ் ஸ்டாப்பில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் உதவியுடன் போலீசார் ஆட்டோக்களை சாலையின் குறுக்கே நிறுத்தி சம்பந்தப்பட்ட காரை நிறுத்த முயற்சித்துள்ளனர்.
ஆனால் அந்த காரை ஓட்டி வந்த மர்ம நபர் காரை நிறுத்தாமல் குறுக்கே இருந்த இடைவெளியில் லாவகமாக புகுந்து வேகமாக செல்ல முயற்சித்துள்ளார்
அப்போது அவ்வழியே சாலையை கடக்க முயன்ற வேம்பார்பட்டியைச் சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி சங்கிலிமணி (வயது 25) என்பவர் மீது கார் பயங்கரமாக மோதி அவரை 50 மீட்டர் சாலையிலேயே இழுத்துச் சென்று தூக்கி வீசியது.
பின்னர் அங்கிருந்தும் நிற்காமல் வேகமாக சென்ற கார் கோபால்பட்டியை அடுத்த வடுகபட்டி பிரிவு என்ற இடத்தில் போலீசார் வரிசையாக சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்த பேரிக்கார்டுகள் மீது மோதியும் எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதி தப்பியது.
இது குறித்து நத்தம் மற்றும் நத்தம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள காவல் நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டு வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டது
இந்நிலையில் அந்த கார் மீண்டும் நத்தம் நோக்கி வேகமாக சென்ற போது எரமநாயக்கன்பட்டி பிரிவில் மூன்றுக்கும் மேற்பட்ட லாரிகளை சாலை குறுக்கே நிறுத்தி மர்ம நபர்கள் ஓட்டி வந்த காரை தடுக்க முயன்றுள்ளனர்
இதையும் படியுங்க: எம்ஜிஆர் மீது வழக்கு தொடுத்து ஜெயித்தவர் என் அப்பா… பிரபல நடிகர் ஓபன் டாக்!
இதைப் பார்த்த மர்ம நபர்கள் காரை யுடர்ன் எடுத்து காரை வேகமாக திருப்பிக் கொண்டு சக்கிலியன் கொடை ஊர்வழியாக தப்பிச் செல்லும்போது காரில் இருந்த 5 பேரில் ஒரு இளைஞர் மட்டும் ஊருக்குள் இறங்கி தப்ப முயற்சித்து ஊருக்குள் இறங்கி ஓடி உள்ளார்.
இதை பார்த்த அந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர் காரில் வந்த மற்ற 4 பேரும் காரை அதிவேகமாக இயக்கி தப்ப முயன்று கரந்தமலை பகுதியில் சுமார் 3 கிலோமீட்டர் ஒத்தையடி பாதையில் காரை இயக்கியுள்ளனர்
அப்பொழுது சக்கிலியன் கொடை பகுதி வழியாக கரந்தமலை வனப்பகுதிக்குள் தண்ணிகொடை பகுதிக்கு காரை அதிவேகமாக ஓட்டி சென்றுள்ளனர்
இதற்கு மேல் வழி இல்லாததால் கார் புதருக்குள் மாட்டிக் கொண்டதால் காரில் இருந்த 4 மர்ம நபர்கள் காட்டுக்குள் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் காரை சுற்றி வளைத்தனர்
காருக்குள்ளிருந்து பட்டாகத்திகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் தப்ப முயன்று பொதுமக்களிடம் சிக்கிய இளைஞர் ஒருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தப்பி ஓடியவர்கள் குறித்தும் எதற்காக ஆயுதங்கள் வைத்திருந்தனர் என்றும் சாணார்பட்டி காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
நள்ளிரவில் சினிமா பட பாணியில் நடைபெற்ற சேசிங் பொதுமக்களின் துக்கத்தை கலைத்த அதிபயங்கர காரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது
நேற்று நள்ளிரவு நடந்த கார் சேசிங் சம்பவத்தில் தொடர்புடைய திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்த வெள்ளைக்கண்ணு மகன் பசுபதி என்பவரை நேற்று இரவு பொதுமக்கள் பிடித்து சாணார்பட்டி போலீசார் வசம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் மலைப்பகுதியில் பதுங்கி இருந்த திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்த சுரேஷ் மகன் கார்த்தி காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அவரை அழைத்துக் கொண்டு ரவிச்சந்திரன் மகன் முத்துக்குமார் ஆகிய இருவரும் இன்று காலை மலையிலிருந்து கீழே இறங்கி வந்தபோது அவர்களையும் பிடித்து சாணார்பட்டி போலீசார் வசம் ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட 3 நபர்களையும் சாணார்பட்டி போலீசார் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் ஆனந்தன் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் மலையிலிருந்து இறங்கி மணியக்காரன்பட்டி வந்த போது பொதுமக்கள் அவர்கள் இருவரையும் பிடித்து சாணார்பட்டி போலீசார் வசம் ஒப்படைத்தனர்.
அவர்கள் இருவரையும் சாணார்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து பின்னர் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கார் சேசிங் சம்பவத்தில் தொடர்புடைய 5 நபர்களை பொதுமக்கள் உதவியுடன் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கைது செய்யப்பட்ட 5 பேரும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த நபர்கள் என்பதால் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் 5 பேரையும் சாணார்பட்டி காவல்துறையினர் ஒப்படைத்தனர்