லஞ்சம் வாங்கிய விஏஓ… துரத்திய போலீஸ்.. கைதுக்கு பயந்து குளத்தில் குதித்து தப்பியோட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2025, 2:15 pm

கோவை மாவட்டம், பேரூர் அருகே ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி. (வயது 62) வாரிசு சான்றிதழ் கேட்டு மத்துவராயபுரம் கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேலை (35) அணுகி உள்ளார்.

இதையும் படியுங்க: செல்போன் கடையில் பணம் கேட்டு திமுகவினர் மிரட்டல்.. அமைச்சர் பெயரை சொல்லி அடாவடி!

அப்போது, வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக கிருஷ்ணசாமி ரூ.1,000 பணத்தை ஏற்கனவே வெற்றிவேலிடம் வழங்கி உள்ளார். மீதமுள்ள பணத்தை நேற்று தருவதாக தெரிவித்து இருந்தார்.

இதை அடுத்து கிராம நிர்வாக அதிகாரி அவரை புட்டுவிக்கி ரோட்டிற்கு வந்து பணத்தை தரும்படி கூறி உள்ளார். இதனிடையே கிருஷ்ணசாமி இதுகுறித்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் திவ்யா மற்றும் போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வழங்கினர். இந்த நோட்டுகளை பெற்றுக் கொண்ட கிருஷ்ணசாமி நேற்று மாலை சுண்டக்காமுத்தூர் சாலையில் உள்ள புட்டுவிக்கி பகுதிக்கு சென்று உள்ளார்.

அங்கு அவர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வெற்றிவேலிடம் வழங்கினார். அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வெற்றிவேலை பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் உஷாரான வெற்றிவேல் அங்கு இருந்து மோட்டார் சைக்கிளில் தப்பியோடினார். அவரை போலீசார் சினிமா பாணியில் துரத்தினர்.

போலீசார் துரத்தி வருவதை அறிந்த வெற்றிவேல் பேரூர் குளத்தேரி சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு பேரூர் குளத்தில் குதித்து, தான் வாங்கிய பணத்தையும் குளத்தில் வீசி எறிந்து உள்ளார்.

அவருக்கு பின்னால் வந்து கொண்டு இருந்த போலீசாரும் குளத்தில் குதித்து வெற்றிவேலை பிடித்தனர். மேலும், குளத்தில் வீசப்பட்ட ரூபாய் சில நோட்டுக்களை மட்டும் நேற்று போலீசார் சேகரித்தனர்.

Police chased VAO

தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலை பேரூர் தாசில்தார் அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மேலும் குளத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • NAISHA AI movie அதிசயம்.!இந்தியாவின் முதல் AI படம்..சாதனை படைக்குமா.!
  • Leave a Reply