குடிபோதையில் இருந்ததால் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் : விரக்தியில் தீக்குளித்த இளைஞர்.. சேலத்தில் பயங்கரம்!!
Author: Udayachandran RadhaKrishnan16 மார்ச் 2022, 2:40 மணி
சேலம் : போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததை தாங்க முடியாமல் குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அமானி கொண்டலாம்பட்டியில் உள்ள அரசமரத்து கரட்டூரை சேர்ந்தவர் அர்ஜுனன். இவருடைய மகன் சந்தோஷ்குமார். இவர் சரக்கு வாகன டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கொண்டலாம்பட்டி ரவுண்டானாவுக்கு சந்தோஷ் நேற்று இரவு 9.30 மணிக்கு தனது சரக்கு வாகனத்தில் வந்தார். அங்கு போலீசார் சந்தோஷ்குமார் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது சந்தோஷ்குமார் குடிபோதையில் இருந்துள்ளார். அதனால் அவர் மீது போலீசார் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகை கட்ட வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனால் வாலிபர் சந்தோஷ்குமார் பறிமுதல் செய்த வாகனத்தை விட்டு செல்ல மனமில்லாமல் பெட்ரோல் வாங்கி வந்து, கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் நடுரோட்டில் நின்று தன் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் உடலில் தீப்பிடித்து எரிந்ததால் அலறித்துடித்தார். தீயில் கருகி காயம் அடைந்த அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வாலிபர் தீக்குளித்து அலறி ஓடும் காட்சி அருகாமையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த காட்சி சேலத்தில் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
0
0