கஞ்சா கடத்தல் கும்பலுடன் பிரியாணி சாப்பிட்ட காவல் ஆய்வாளர் : புகைப்படம் வைரலானதால் காவல்துறை எடுத்த அதிரடி ஆக்ஷன்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2022, 10:27 pm

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட கஞ்சா பொட்டலங்கள், விசைப்படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருப்பதாக நாகை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு நாகை துறைமுகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட எஸ்.ஐ பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார்  4 கோடி ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா பொட்டலங்களை  பறிமுதல் செய்தனர்.

மேலும், கடத்தலில் தொடர்புடைய அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர் மோகன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சிலம்பரசன், நிவாஸ், கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ஜெகதீசன், பாப்பாகோவில் பகுதியைச் சேர்ந்த சரவணன் உள்ளிட்ட 5 பேரை பிடித்த தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

இந்த நிலையில் சிறையில் இருக்கும் இலங்கைக்கு கஞ்சா கடத்தும் கும்பலின் தலைவன் சிலம்பரசன் வீட்டில் நாகை நகர காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமயிலான சிறப்பு தனிப்படை போலிசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சிலம்பரசன் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது குறித்த சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் கஞ்சா வியாபாரிகளை களையெடுக்க வேண்டிய காவல் அதிகாரியே கஞ்சா கடத்தல் கும்பலோடு பிரியாணி விருந்து சாப்பிடும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா கடத்தல் வழக்கில் சிறையில் இருக்கும் முக்கிய குற்றவாளியான சிலம்பரசன் மற்றும் அவருடைய நண்பர்களோடு காவல் உடை அணிந்த நாகை நகர காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி பிரியாணி விருந்தில் பங்கேற்று உள்ளார்.

கஞ்சா குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய காவல் ஆய்வாளர் கடத்தல் குற்றவாளிகளோடு சொகுசு ஹோட்டலில் பிரியாணி சாப்பிடும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் காவலர் சீருடையில் பிரியாணி சாப்பிட்ட ஆய்வாளர் பெரியசாமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!