ஒரே மாதத்தில் 2வது முறையாக பொதிகை ரயிலை கவிழ்க்க சதியா? உண்மை என்ன?
Author: Hariharasudhan1 நவம்பர் 2024, 5:25 மணி
கடையநல்லூர் அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலைக் கவிழ்க்க சதியா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தென்காசி: நாடு முழுவதும் சமீப காலங்களில் ரயில் தடம் புரண்டது, பெட்டிகள் கழன்றது என ரயில் விபத்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் ரயில்வே நிர்வாகம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மத்திய, மாநில எதிர்கட்சிகளும் போர்க்கொடி தூக்கி வருகின்றன. இந்நிலையில், தென்மாவட்ட மக்களின் மிக முக்கிய ரயிலாக பார்க்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா என்றவாறு மீண்டும் ஒரு சம்பவம் ஒரே மாதத்தில் நிகழ்ந்துள்ளது.
இதன்படி, தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இருந்து நேற்று மாலை பொதிகை விரைவு ரயில் வழக்கம்போல் புறப்பட்டது. இதனையடுத்து, கடையநல்லூர் வழியாக ரயில் சென்று கொண்டிருந்த பொழுது, ரயில் தண்டவாளத்தின் மீது 10 கிலோ எடை கொண்ட பெரிய கல் வைக்கப்பட்டது போன்று தெரிந்துள்ளது. குறிப்பாக, போகநல்லூர் என்ற கிராமத்தில் ரயில்வே தண்டவாளத்தில் 10 கிலோ எடை கொண்ட பாறாங்கல் வைக்கப்பட்டு இருந்து உள்ளது.
பின்னர், இதனைப் பார்த்த லோகோ பைலட், இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. பின்னர், அங்கு வந்த ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அந்த கல்லை அப்புறப்படுத்தி உள்ளனர். இதனையடுத்து, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டதா என்ற கோணத்தில் மீண்டும் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி இதே பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டையில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்தது. அப்போது, கடையநல்லூர் – பாம்பகோவில்சந்தை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் இருந்த கல் மீது மோதி என்ஜினின் முன்பக்க தகடு சேதம் அடைந்தது. இதனையடுத்து, ரயில்வே பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, சீரமைக்கப்பட்ட பின் ரயில் புறப்பட்டுச் சென்றது.
இதையும் படிங்க : 2வது திருமணம் செய்த சன் டிவி ரீல் ஜோடி வீட்டில் விசேஷம்.. தல தீபாவளியில் வெளியான அறிவிப்பு!
பின்னர், இது குறித்து விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதன் அடிப்படையில், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் வந்த தண்டவாளத்தில் கல் வைத்தது தொடர்பாக, அதே பகுதியில் உள்ள கல்குவாரியில் பணியாற்றி வரும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பால்சிங் பகேல் (21) மற்றும் ஈஸ்வர் மேடியா (23) ஆகிய இருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் கைது செய்தனர். இவ்வாறு ஒரு மாத கால இடைவெளியில் ஒரே ரயிலை அச்சுறுத்தும் விதத்தில் சம்பவம் அரங்கேறி உள்ளது.
0
0